”எல்லா அகதிகளையும் வரவேற்க இந்தியா சத்திரம் அல்ல” இலங்கை தமிழரின் மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம்!
செய்தியாளர்: ராஜிவ்
இலங்கையை சேர்ந்த விடுதலைப் புலிகள் அமைப்பில் தொடர்புடைய சுபாஷ்கரன், கிருஷ்ணகுமார் ஆகியோர் 2016 ஆம் ஆண்டு தனிப்பிரிவு போலிசார் சோதனையின்போது ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி என்ற இடத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்களை கைது செய்து சிறையில் அடைத்த தனிப்பிரிவு போலீசார் பின்னர் ராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்தனர்.
விசாரணையின்போது தடைசெய்யப்பட்ட எல்டிடிஇ அமைப்பினருக்கு இவர்கள் ஆதரவாக செயல்பட்டது உறுதி செய்யப்பட்டதால், இவர்களுக்கு 10 வருட கடுங்காவல் சிறை தண்டனை அளித்து 2018 ஆம் ஆண்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த தண்டனையை ரத்து செய்யக் கோரி இருவரும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி முரளி சங்கர் முன் விசாரணைக்கு வந்தது
விசாரணையின்போது இந்தியாவில் இனி சட்டவிரோத செயல்களில் தாங்கள் ஈடுபட மாட்டோம் என்றும் நீதிமன்றம் விடுவிக்கும் பட்சத்தில் உடனடியாக இலங்கைக்கு திரும்பி விடுவதாக உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்திருந்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டு பத்து வருட சிறை தண்டனையை 7 வருடமாக குறைத்து உத்தரவு பிறப்பித்தார். மேலும் இவர்களை சிறையில் இருந்து விடுவிக்கலாம் என உத்தரவு பிறப்பித்த நீதிபதி சிறையிலிருந்து வெளியேறிய உடன் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் வெளியேறும் வரை அகதிகள் முகாமில் தங்கி கொள்ளலாம் என உத்தரவு பிறப்பித்து வழக்கை முடித்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரரின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்றம்சாட்டப்பட்டவர் ஒரு இலங்கைத் தமிழர் என்றும், அவர் விசாவில் இங்கு வந்தவர், அவரது சொந்த நாட்டில் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறினார்.
மனுதாரர் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக நாடு கடத்தல் நடைமுறைகள் இல்லாமல் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது சுட்டிக் காட்டப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி தத்தா, இங்கே குடியேற உங்களுக்கு என்ன உரிமை உள்ளது? என்று கேள்வி எழுப்பினார். மனுதாரர் ஒரு அகதி என்றும், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் ஏற்கனவே இந்தியாவில் வசித்து வருவதாகவும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பதிலளித்தார்.
உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி மனுதாரரின் சுதந்திரம் குறைக்கப்பட்டதால், பிரிவு 21 மீறப்படவில்லை என்று நீதிபதி தத்தா கூறினார். பிரிவு 19 இன் கீழ் இந்தியாவில் வசித்து குடியேறுவதற்கான அடிப்படை உரிமை இந்திய குடிமக்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். மனுதாரர் தனது நாட்டில் உயிருக்கு அச்சுறுத்தலை எதிர்கொள்கிறார் என்று வழக்கறிஞர் கூறியபோது, நீதிபதி தத்தா, 'வேறு ஏதாவது ஒரு நாட்டிற்குச் செல்லுங்கள்' என்று தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.