லா நினா விளைவு.. ஊட்டியாக மாறப்போகும் தமிழ்நாடு : வெதர்மேன் ஹேமச்சந்தர் கூறுவது என்ன ?
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அதீத குளிர் நிலவி வரும் நிலையில், அதற்கு லா நினா விளைவு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. உலக வெப்ப மயம் காரணமாக உலகின் மிகப்பெரிய பெருங்கடலான பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் வெப்பநிலை சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்தும், குறைந்தும் வருகிறது.
பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் ஏற்படும் வெப்ப மாற்றம் உலகளவில் காலநிலைகளை மாற்றியமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் வெப்பம் அதிகரித்தால் ஏற்படும் பாதிப்பு எல் நினோ என்றும், பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் வெப்பம் குறைந்தால், அதனால் ஏற்படும் பாதிப்பு லா நினா என்றும் அழைக்கப்படுகிறது.
அந்த வகையில் தற்போது லா நினா விளைவு ஏற்பட்டுள்ளதால் உலகளாவிய வானிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது நிலவும் அதீத குளிர் வானிலைக்கும் இதுவே காரணமாக பார்க்கப்படுகிறது. இது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர், லா நினா விளைவு காரணமாக தமிழ்நாட்டில் வெப்பநிலை மிகவும் குறையும் என்றும், வெப்பநிலை 10 டிகிரி செல்ஸியஸ்க்கும் குறைவாக பதிவாகும் என்றும் கூறியுள்ளார்.
வடஇந்தியாவில் இருந்து வரும் வறண்ட குளிர் காற்று காரணமாக, தமிழ்நாட்டில் குளிர் தீவிரமடையவுள்ளது. ithanal தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் 16 முதல் 18 டிகிரி செல்ஸியஸ் வரையும், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்ப நிலை 18- 21 டிகிரி செல்ஸியஸ் வரை பதிவாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதே நேரம் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் 10 டிகிரி செல்ஸியஸ் வரை பதிவாகும் என்றும் கூறியுள்ளார். மேலும் ஊட்டி, வால்பாறை பகுதிகளில் உறைபனி நிலவவும் வாய்ப்புள்ளதாகவும், வரும் டிசம்பர் 16,17,18 ஆகிய நாட்களில் சில மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார்.

