“இன்று மாலையே புயல் கரையைக் கடக்கும்”.. மீண்டும் மாறிய நேரம்.. பாலச்சந்திரன் சொல்வதென்ன?
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று மாலை கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் தற்போது புதுவைக்கு வடகிழக்கே சுமார் 100 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 100 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. தற்போது இது மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகர்ந்துகொண்டு இருக்கிறது. இது இன்று மாலை காரைக்காலுக்கும், மகாபலிபுரத்துக்கும் இடையே புதுவைக்கு அருகில் கரையைக் கடக்கக்கூடும்.
அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஒரு சில இடங்களில் அதிகனமழையும், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், பெரம்பலூர், மயிலாடுதுறை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் அதிகனமழையும், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி ஆகிய இடங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.
நாளை கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுவை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கும், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், திருப்பத்தூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிக கனமழையும் பெய்யக்கூடும்.
2 ஆம் தேதி மேற்குத் தொடர்ச்சி மழையை ஒட்டியுள்ள கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிககனமழையும், கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், தருமபுரி, நாமக்கல், திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.
இன்று புயல் கரையைக் கடக்கும்போது திருவள்ளூர் தொடங்கி மயிலாடுதுறை வரையிலான வடகடலோர மாவட்டங்களில் பலத்த காற்றானது மணிக்கு 70 முதல் 80 கிமீ வரையிலும் அவ்வப்போது 90 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 50 முதல் 60 கிமீ வேகத்தில் வீசக்கூடும்” எனத் தெரிவித்துள்ளார்.