‘உன்னை நம்பி இந்த நாடு காத்திருக்கு..’ விஜய் புகைப்படத்துடன் இளையராஜா பகிர்ந்த பாடல்!
தமிழ்நாடு அரசியலில் மும்முனை போட்டி சூடுபிடித்துள்ள நிலையில், ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பு விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்திற்கு 120 இடங்கள் வரை தனிப்பெரும்பான்மை கணிக்கிறது. இந்த அரசியல் பரபரப்பின் மத்தியில், 1988ஆம் ஆண்டு ‘இது எங்கள் நீதி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த விஜய் புகைப்படத்துடன் ‘சின்ன தம்பி உன்னை நம்பி இந்த நாடு காத்திருக்கு’ பாடலை, இளையராஜா யூடியூபில் பகிர்ந்திருப்பது கவனத்தை பெற்றுள்ளது.
தமிழ்நாடு அரசியல் களம் பல தசாப்தங்களுக்கு பிறகு வலுவான மும்முனை போட்டியை கண்டுள்ளதாக பல அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தேர்தலுக்கு முன் விஜயை பார்க்க மட்டுமே கூட்டும் கூடுகிறது என்றும், அது பெரியதாக ஓட்டாக மாறாது என்றும் சொல்லப்பட்ட நிலையில் தற்போது தேர்தல் முடிவுக்கு முன்னால் வெளியான கருத்துக்கணிப்பு எல்லோரையும் கொஞ்சம் ஆட்டித்தான் பார்த்துள்ளது.
ஆக்ஸிஸ் மை இந்தியா வெளியிட்ட கருத்துக்கணிப்பின் படி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் 120 இடங்கள் வரை தனிப்பெரும்பான்மையாக வெற்றிபெறும் எனக் கணித்துள்ளது. இதை ரியாலிட்டி இல்லை என்று ஒதுக்கி விடமுடியாது என்று கூறும் அரசியல் கருத்தாளர்கள், விஜய் பெரும்பான்மை பெறலாம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஒருபக்கம் விஜய் முருகன் கோவில், சாய் பாபா கோவில் என தேர்தல் முடிவுக்கு முன் வேண்டுதலை வைத்துவரும் நிலையில், விஜய் மற்றும் தவெக சார்ந்து வெளியாகும் செய்திகள் தலைப்புச்செய்தியாகி வருகின்றன.
இந்தசூழலில் தான் விஜய் புகைப்படத்துடன் ‘சின்ன தம்பி உன்ன நம்பி இந்த நாடு காத்திருக்கு’ என்ற பாடலை தன்னுடைய யூடியூப் சேனலில் இளையராஜா பகிர்ந்திருப்பது கவனம் பெற்றுள்ளது.
1988ஆம் ஆண்டு விஜயின் தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான ’இது எங்கள் நீதி’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலைத்தான் இளையராஜா பகிர்ந்துள்ளார். நிழல்கள் ரவி, ராதிகா உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப்படத்தில் விஜயும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கும் சூழலில் விஜய் புகைப்படத்துடன் ‘சின்ன தம்பி உன்னை நம்பி இந்த நாடு காத்திருக்கு’ என்ற பாடலை இளையராஜா பகிர்ந்திருப்பது கவனத்தை பெற்றுவருகிறது.

