விஜய்க்கு மக்கள் செல்வாக்கு அதிகமாக இருக்கிறது. இளைஞர்கள் பட்டாளம் அதிகம். - செல்லூர் ராஜூ
செய்தியாளர்: மணிகண்டபிரபு
மதுரை மாவட்டம் பரவை அருகே சத்தியமூர்த்த ிநகர் பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ புதிய அங்கன்வாடி மைய கட்டட திறப்பு விழா மற்றும் புதிய நிழற்குடை அமைப்தற்கான பூமி பூஜையில் கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில்...
செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி:
வழக்கில் இருக்கும் அமைச்சருக்கு கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றம் அமைச்சராக தொடர விருப்பமா? என கேள்வி எழுப்பியுள்ளது. திமுக அரசில் ஜாமீன் வாங்கிய அமைச்சர்கள் தான் இருக்கிறார்கள். நீதிமன்ற வழக்குகள் உள்ள அமைச்சர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சி பணிக்கு மாற்ற வேண்டும். அதிமுகவில் அமைச்சர்களுக்கு வழக்குகள் இருந்தால் இது போன்ற நடவடிக்கையை தான் ஜெயலலிதாவும் எடப்பாடி பழனிசாமியும் எடுத்திருப்பார்கள்.
திமுகவில் உள்ள எம்எல்ஏக்களில் இளைஞர்கள் அதிக அளவில் உள்ளனர், அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும். ஜெயலலிதா தவறு செய்த அதிமுக அமைச்சர்கள் 10 பேரை ஒரே இரவில் அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்தார். வழக்கில் தொடர்புடைய அமைச்சர்கள் மீது மு.க.ஸ்டாலின் சாட்டையை சுழற்றாமல் முதுகில் தட்டிக் கொடுத்து வருகிறார்.
எடப்பாடி பழனிசாமி மட்டுமே முடிவுகளை எடுப்பார்:
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்குவதற்கான பணிகளை செய்து வருகிறோம். எடப்பாடி பழனிசாமி மட்டுமே முடிவுகளை எடுப்பார், எடப்பாடி பழனிசாமி அதிமுக ஆட்சியை அமைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார், அவர் கொடுத்துள்ள பணிகளை நாங்கள் செய்து வருகிறோம். அண்ணன் ஓபிஎஸ், டிடிவி சார் பேச்சுக்களுக்கு நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.
இன்றும் நான் என் மனைவியை காதலிக்கிறேன்:
அதிமுகவிற்குள் எந்த பிளவும் இல்லை. ஊடகங்கள் தான் ஊதி ஊதி பெரிதாக்குகிறது. இன்றும் நான் என் மனைவியை காதலிக்கிறேன் என்னை போல் அனைவரும் அவர்களது மனைவியை காதலிக்க வேண்டும். விஜய் ஒரு பிரபலமான நடிகர். மக்கள் செல்வாக்கு அதிகமாக இருக்கிறது. இளைஞர்கள் பட்டாளம் அதிகமாக இருக்கிறார்கள்.
அதனால் அவருக்கு பாதுகாப்பு வழங்கி இருக்கிறார்கள். அதிமுக ஆட்சி என்றால் பாதுகாப்பாக இருக்கலாம். திமுக ஆட்சி பெண்கள் முதல் மூதாட்டி வரை பாதுகாப்பு இல்லை என்பதால் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது நல்லது என்று செல்லூர் ராஜூ தெரிவித்தார்.