அரசுக்கு ரூ.1.34 கோடி வருவாய் இழப்பு | மாவட்ட பதிவாளர் வீட்டில் லஞ்சஒழிப்புத் துறை போலீசார் சோதனை
செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்
சென்னை மதுரவாயல் அடுத்த நூம்பல் பகுதியைச் சேர்ந்தவர் செந்தூர் பாண்டியன். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டத்தில் சார் பதிவாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், இவர் பதவி உயர்வு பெற்று திருப்பத்தூர் மாவட்ட பதிவாளராக பணியாற்றி வருகிறார். இதையடுத்து இவர், செங்கல்பட்டு மாவட்டத்தில் பணியாற்றிய போது முத்திரை கட்டணம் குறைவாக பதிவு செய்து அரசுக்கு ரூ.1.34 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில், மதுரவாயல் அடுத்த நூம்பல் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு இன்று காலை காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் டிஎஸ்பி கலைச்செல்வன், இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் குழுவினர் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றி அது குறித்து செந்தூர் பாண்டியனிடம் விசாரித்து வருகின்றனர்.
தற்போது மாவட்ட பதிவாளராக இருக்கும் செந்தூர் பாண்டியன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்தி வரும் சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.