"புயல் நிவாரண நிதிக்கு எனது ஒரு மாத ஊதியத்தினை வழங்குகிறேன்" - முதலமைச்சர் ஸ்டாலின்

“ புயல் நிவாரண நிதிக்கு எனது ஒரு மாத ஊதியத்தினை வழங்குகிறேன். மேலும் எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்களும் நிதியுதவி அளித்திடுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன். “- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின் ஃபேஸ்புக்

புயல் நிவாரண நிதிக்கு தனது ஒரு மாதகால ஊதியத்தினை வழங்குவதாக உறுதி அளித்த முதல்வர் ஸ்டாலின், எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்களும் புயல் நிவாரண நிதிக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி ஆட்டம் காட்டிய மிக்ஜாம் புயலானது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை பெரும் சேதத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. அடிப்படை தேவைகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், அரசாங்கம் சார்பிலும் உதவிகள் இன்றளவும் வழங்கப்பட்டு வருகிறது.

எனவே முன்னதாக புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க தமிழக அரசு 5,060 கோடி ரூபாயை மத்திய அரசிடம் கேட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து நேற்று முதற்கட்டமாக 450 கோடியும், இரண்டாம் தவணை மாநில பேரிடர் நிவாரண நிதியாக 450 கோடி ரூபாயும், வெள்ள மேலாண்மை என்ற புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து ரூ.561.29 கோடியும் விடுவிக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் உத்தரவு வெளியிட்டது.

இதற்கு மத்தியில் முதல்வர் ஸ்டாலினும் தனது ஒரு மாத ஊதியத்தினை புயல் நிவாரண நிதிக்காக வழங்குவதாக தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில், “மிக்ஜாம் புயலால் கடந்த டிசம்பர் 2 முதல் 4-ஆம் தேதி வரை சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த மழை என்பது, 47 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவிலான பெருமழை. இந்த இயற்கைப் பேரிடரால் ஏறத்தாழ 1 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்தப் பேரிடர் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களுக்கு ஏற்பட்டுள்ள பேரிடர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்குமே ஏற்பட்டுள்ள பேரிடர்.

மழைநீர் வடிகால் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்தி இருந்ததால்தான் பேரழிவு தவிர்க்கப்பட்டது. அதேபோல் அனைத்துத் துறைகளும் பேரிடரை எதிர்கொள்ள தயார் நிலையில் இருந்ததும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வைத்திருந்ததும் இணைந்து மக்களைக் காத்துள்ளது.

இருப்பினும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுவீச்சில் நடைபெற்ற மீட்புப் பணிகளின் காரணமாக மூன்று நாட்களுக்குள் பெரும்பாலான இடங்கள் மீட்கப்பட்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி உள்ளது. குறிப்பிட்ட சில பகுதிகளில் மீட்புப் பணி நடந்து வருகிறது. இத்தகைய அசாதாரண நேரத்தில் அனைத்துத் தரப்பும் மக்களுக்கு உறுதுணையாக நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்தப் பேரிடர் பாதிப்பிலிருந்து மக்கள் மீள்வதற்கு உதவியாக நல்லுள்ளங்கள் பலர் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தங்களுடைய பங்களிப்பை வழங்குகின்றனர். அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த இயற்கைப் பேரிடரிலிருந்து மீள்வதற்கான கூடுதல் நிதி ஆதாரங்களைத் திரட்ட வேண்டியது அவசியமாகிறது.

முதலமைச்சர் ஸ்டாலின்
முதல்வரிடம் புயல் பாதிப்பு விவரங்களை கேட்டறிந்த பிரதமர் மோடி... தமிழ்நாட்டுக்கு நிதி விடுவிப்பு!

எனவே, அரசின் முனைப்பான முயற்சிகளுக்கு நமது சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தங்களால் இயன்ற வகையில் உதவி செய்ய வேண்டியது அவசியம். இச்சூழலில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிட வேண்டுமென்று உங்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

அதன் தொடக்கமாக என்னுடைய ஒரு மாத கால ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குகிறேன். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களும் தங்களுடைய ஒரு மாத கால ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின்
"வீடு கட்டி முடித்தும் கைக்கு கிடைக்கவில்லை"- இருளர் இன மக்கள் வருத்தம்

முன்னதாக, தமிழக ஐபிஎஸ் சங்கம், ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் தங்களின் ஒரு நாள் ஊதியத்தினை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளன என்பது கூடுதலான செய்தி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com