1969தீர்மானம் to 2006 டிச.17 திறப்பு வரை; ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை வைக்கப்பட்டதன் பின்னணி வரலாறு

டிசம்பர் 7 ஆம் தேதி மர்ம நபர்களால் சிலை உடைக்கப்பட்டது. சிலையை உடைத்ததாக இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் 4 பேரும் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
அண்ணாமலை
அண்ணாமலைpt web

“தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்போது அறநிலையத்துறை இருக்காது” என்று தமிழ்நாடு பாஜக தலைவர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். இது ஒருபுறம் எனில் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வெளியில் இருக்கும் பெரியார் சிலை அகற்றப்பட வேண்டுமென்றும் கூறி வருகின்றனர்.

கடந்த ஆண்டு சினிமா சண்டைப் பயிற்சியாளரான கனல் கண்ணன், “ஸ்ரீரங்க நாதரை கும்பிட ஒரு நாளைக்கு ஒரு லட்சம்பேர் சாமி கும்பிட்டுவிட்டு வருகிறார்கள். கோவிலுக்கு ஏதிரே கடவுளே இல்லை என்று சொன்னவரின் சிலை என்று உடைக்கப்படுகிறதோ அன்று தான் இந்துக்களின் எழிச்சி நாள்” என்று பேசி இருந்தார்.

இதற்கு தமிழகத்தில் ஒருசேர எதிர்ப்பும் ஆதரவும் இருந்தது. தமிழ்நாடு பாஜகவினர் கனல் கண்ணனுக்கு ஆதரவாக பேசினால் திமுக, திகவினர் இதற்கு கடுமையான கண்டங்களை தெரிவித்து இருந்தனர். கனல் கண்ணனும் கைது செய்யப்பட்டார். கனல் கண்ணனுக்கு ஆதரவாக பேசி இருந்த அண்ணாமலை. “ஆயிரம் பேர் கோவிலுக்குள் போகும் ஸ்ரீரங்கத்தின் வெளியே உங்கள் பத்திரிக்கையாளர்கள் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தி கோவிலுக்கு வெளியே சிலை இருக்க வேண்டுமா என கேளுங்கள். ஆயிரம் பேரும் இருக்கக் கூடாது என்று தான் சொல்லுவார்கள்” என சொல்லி இருந்தார்.

இந்நிலையில் மீண்டும் ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள பெரியார் சிலை அகற்றப்பட வேண்டும் என்ற பேச்சு எழுந்துள்ளது. ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை வைப்பதற்கு திராவிடர்கழகம் தொடர்ச்சியாக முயற்சி செய்து வந்தது. அப்போது திமுக இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்திருந்தது.

1969 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி ஸ்ரீரங்கத்தில் நடந்த திராவிடர் கழக கூட்டத்தில் பெரியாருக்கு சிலைவைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மனுவாக நகராட்சியிடம் கொடுத்தனர். அப்போது ஸ்ரீரங்கத்தின் நகராட்சியின் தலைவராக சுதந்திராக் கட்சியைச் சேர்ந்த வெங்கடேஸ்வர தீட்சிதர் இருந்தார். நகராட்சி சார்பில் மனு பெற்றுக்கொள்ளப் பட்டு அதற்கான இடமும் (144 சதுர அடி) ஒதுக்கப்பட்டது. அந்த இடம் அம்மா மண்டபம் சாலையில் ஸ்ரீரங்கம் கோவில் கோபுரத்திற்கு எதிரே ஒதுக்கப்பட்டிருந்தது.

1972 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி திருச்சி ஆட்சியர் மாநில அரசுக்கு பரிந்துரை செய்தார். இதனைத் தொடர்ந்து வருவாய் வாரியத்துக்கு அரசு அனுப்ப வருவாய் வாரியம் அதை பரிசீலித்து மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கைகளை ஏற்றது. இதனை அடுத்து நிலத்திற்கான மதிப்புக் கட்டணம் மற்றும் பிற கட்டணங்களை நிர்ணயம் செய்து ஸ்ரீரங்கம் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை பெறுவதற்கு உத்தரவிட்டது.

1973 ஆம் ஆண்டு முதலமைச்சர் கருணாநிதி சட்டமன்றத்தில் பெரியார் சிலைக்காக நிலம் ஒதுக்கப்பட்டதை அறிவித்தார். தமிழ்நாடு அரசும் அதற்கான அரசாணையை வெளியிட்டது. அரசாணை எண்.162 தேதி 24.1.1973 (அருஞ்சொல் இதழ் நீதியரசர் கே.சந்துரு எழுதிய கட்டுரையில் இருந்து)

இதனை அடுத்து நிலம் பெரியார் சுயமரியாதை பிரச்சார இயக்கத்திடம் 1975 ஆம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டது. இருந்த போதும் எமர்ஜென்சி காலம், திமுக ஆட்சி கலைக்கப்பட்டது, திருச்சியில் ஏற்பட்ட வெள்ளம் என பல்வேறு காரணங்களால் சிலை வைப்பது தள்ளிச்சென்ற வண்ணமே இருந்தது. இது ஒருபுறம் இருந்தாலும் சில தரப்பினரால் பெரியார் சிலை எதிர்ப்புக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டது. சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா 4/12/1996 அன்று நடந்தது.

2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பீடம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு 6 அடி உயரத்தில் பீடம் எழுப்பப்பட்டது. 29 ஆம் தேதி இரவு 8 அடி உயரத்தில் பெரியாரின் சிலையும் நிறுவப்பட்டிருந்தது. திறப்புவிழாவை ஒட்டி அதை துணியால் மூடி வைத்திருந்தனர். சிலை திறப்புக்கு எதிர்ப்பு இருந்த நிலையில் காவல்துறையினரின் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது,

2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி திறக்கப்படும் என கூறப்பட்டு பல்வேறு காரணங்கள் காரணமாக 9 ஆம் தேதி சிலை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் டிசம்பர் 7 ஆம் தேதி மர்ம நபர்களால் சிலை உடைக்கப்பட்டது. சிலையை உடைத்ததாக இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் 4 பேரும் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

இதன் காரணமாக பல்வேறு இடங்களில் பெரியார் தொண்டர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். சிலை உடைக்கப்பட்டது குறித்து அன்று அறிக்கை வெளியிட்டிருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா. பாண்டியன், “7.12.2006 விடியற்காலை தந்தை பெரியாருக்கு நிறுவப்பட்ட சிலையை இடித்து நொறுக்கி தலைப்பாகம் வெட்டி எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. தமிழகத்தில் நிலவி வரும் சமூக ஒற்றுமையைச் சீர் குலைக்கவும், சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை கிளப்பிவிடவும், பிற்போக்குவாதிகள், வகுப்புவாதிகள் சேர்ந்து செய்துள்ள கண்டனத்திற்குறிய கேடு கெட்ட இச்செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வன்மையாக கண்டிக்கிறது” என தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 7 அன்று சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஞானசேகரன் பெரியார் சிலை உடைப்பு தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். இத்தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் கருணாநிதி, “ஞானசேகரன் குறிப்பிட்டதைப் போல சிலையிலே சிலருக்கு கருத்துவேறுபாடுகள் இருக்கலாம். அந்த சிலைக்குறிய தலைவர்கள், பெரியவர்கள் சொன்ன கருத்துகளில் வேறுபாடான நிலைகள் மற்றவர்களுக்கு இருக்கலாம். அதற்காக சிலைகளை இப்படி சேதப்படுத்துவதென்ற அராஜகச் செயலை அனுமதிக்க முடியாது. இந்த அரசு நிச்சயமாக அனுமதிக்காது.

சிலையை உடைத்தவர்கள் யாராயினும் மன்னிக்கப்படக் கூடியவர்கள் அல்ல என்பதை இந்த மாமன்றத்தில் இந்த அரசின் சார்பில் நான் எடுத்துக் கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 8 ஆம் தேதி மாலை 3 மணியளவில் சென்னையில் மேற்கு மாம்பலத்தில் அன்றைய காலக்கட்டத்தில் 52 ஆண்டுகள் முன்பு கட்டப்பட்டிருந்த அயோத்தி மண்டபம் என்றழைக்கப்படும் ஸ்ரீ ராம சமாஜத்திற்கு ஆயுதங்களோடு வந்த 8 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்தவர்களுக்கு மிரட்டல் விடுத்தனர். தொடர்ந்து கோவிலுக்குள் பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டன. தமிழ்நாட்டில் பல இடங்களிலும் இதுகுறித்தான பிரச்சனைகள் எழுந்தன. இந்த விவகாரத்தில் பெரியார் திராவிடர் கழக தென் சென்னை மாவட்ட தலைவர் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

முடிவில் டிசம்பர் 17 அம் தேதி தந்தை பெரியார் வெண்கலச் சிலை திறக்கப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com