Arignar Anna Birthday | பேரறிஞர் அண்ணா ஏன் தமிழக அரசியலின் அச்சாணி?

21 ஆண்டுகாலம் ஆட்சியில் நீடித்த காங்கிரஸ் கட்சியை முடிவுக்கு கொண்டு வந்த தேர்தல் அது. அதற்கடுத்து வந்த தேர்தல்களில் தமிழ்நாட்டில் தேசிய கட்சியினர் ஆட்சியில் அமர முடியாது என அக்காலத்தில் எவரும் நினைத்திருக்க மாட்டார்கள்.
அண்ணா
அண்ணாpt web

அண்ணா!

தலை சீவ மாட்டார், கண்ணாடி பார்க்க மாட்டார், மோதிரமோ கைக்கடிகாரமோ அணியும் பழக்கமில்லை ஆனால் அவர் பேசுகிறார் என்றால் அந்த 10 நிமிடங்களுக்காக நாள் முழுக்க மக்கள் காத்திருப்பார்கள். திமுகவினர் ஒரு நாளில் 5 கூட்டங்களுக்கு திட்டமிடுகிறார்கள் என்றால் வழி எங்கும் திரண்டிருக்கும் மக்கள் தங்கள் ஊர்களில் அண்ணா ஓரிரு வார்த்தைகளாவது பேச வேண்டும் என்று காத்திருப்பார்கள். அப்படி இப்படியாக ஒரு நாளில் 25 கூட்டங்களுக்கும் அதிகமாக நடந்திருக்கும்.

வார்த்தைகளில் வித்தை காட்டும் அவர் எதிரணியையும் மெய்சிலிர்க்கச் செய்வார். இன்னும் எத்தனை எத்தனையோ செயல்களால் மக்கள் மனதை வென்றவர்.. அவர் தான் மக்களால் அன்பொழுக அண்ணா என்றழைக்கப்பட்ட சி.என்.அண்ணாதுரை.

அண்ணா - பெரியார் சந்திப்பு

1909 ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி எளிய நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர் அண்ணாதுரை. தந்தை பெயர் நடராசன். தாயின் பெயர் பங்காரு அம்மாள். எளிய குடும்பம், பச்சையப்பன் பள்ளியில் ஆரம்ப கல்வி, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இண்டர்மீடியட், அடுத்தது பி.ஏ. ஆனர்ஸ். கல்லூரிக் காலத்திலேயே புத்தகங்களில் வாழ்ந்தவர் அண்ணா.

1934 ஆம் ஆண்டில் பட்டப்படிப்பை முடிக்கிறார். படிக்கும் காலத்திலேயே மாணவர் சங்கச் செயலாளர், ஆங்கில மாணவர் கழக செயலாளர், பொருளாதாரக் கழகச் செயலாளர் என பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர். இதனால் மாணவர்கள் மத்தியில் அண்ணாவிற்கு செல்வாக்கு அதிகரித்தது.

அண்ணாவிற்கு திருப்புமுனை ஏற்படுத்திய ஆண்டு 1934. பி.ஏ. ஆனர்ஸ் தேர்வு எழுதியிருந்த அவர் இடைப்பட்ட காலத்தில் பெரியாரைச் சந்திக்கிறார். திருப்பூரில் நடந்த ஒரு வாலிபர் மாநாட்டில் நிகழ்ந்தது அந்த சந்திப்பு. இது குறித்து அவரே கூறியிருக்கிறார். “பெரியார் என்னைப் பார்த்து என்ன செய்கிறாய் என கேட்டார். படிக்கிறேன், பரிட்சை எழுதியிருக்கிறேன் என்றேன். உத்தியோகம் பார்க்கப்போகிறாயா என்றார். இல்லை, உத்தியோகம் பார்க்க விருப்பம் இல்லை, பொதுவாழ்வில் ஈடுபட விருப்பம் என பதிலளித்தேன். அன்று முதல் அவர் எனக்கு தலைவரானார். நான் அவருக்கு சுவீகாரப் புத்திரனாக ஆகிவிட்டேன்” அவ்வளவு தான்., முடிந்தது கதை.

திக -திமுக

தன் வாழ்வு எதை நோக்கி இருக்க வேண்டும் என்று 25 வயதில் தீர்மானித்தவர். 1936-ம் ஆண்டு தேர்தலில் நீதிக்கட்சி சார்பாக பெத்துநாயக்கன் பேட்டையில் நின்று தோற்றாலும் பொதுவாழ்வில் அவருக்கு ஆர்வம் அதிகரித்தது. இதனை அடுத்து பெரியாருடன் இணைந்து பயணித்தவர், பல போராட்டங்களில் அவருக்கு தளபதியாக முன் நின்றார். 1938-ம் ஆண்டில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார். சிறையில் ஒரே வரிசைக் கட்டடத்தில் பெரியாருடன் தங்க நேரிட்டது. நெருக்கமும் அதிகரித்தது.

ஒரு கட்டத்தில் இயக்கத்தின் வளர்ச்சியும் மக்களுக்கு இன்னும் அதிகளவில் நன்மைகளைச் செய்ய வேண்டும் என்றால் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது முக்கியம் என்பதை உணர்ந்த அண்ணா அதன் தொடர்ச்சியாக திகவில் இருந்து விலகினார். திமுகவை தொடங்கினார். 1967 ஆம் ஆண்டு ஆட்சியையும் பிடித்தார். மகத்தான திட்டங்களை கொண்டு வந்தார்.

அண்ணாவும் அடக்குமுறையும்

வரலாறு நெடுகிலும் நாம் பார்த்தது, அரசுக்கு எதிராக ஒரு இயக்கம் வளர்கிறது என்றால் அந்த இயக்கமும் அதன் தலைவர்களும் கடுமையான ஒடுக்குமுறைகளைச் சந்திக்க வேண்டி வரும். அதற்கு அண்ணாவும் விதிவிலக்கல்ல. 1943 ஆம் ஆண்டு அவர் எழுதிய ஆரியமாயை எனும் புத்தகம் 1950 ஆம் ஆண்டு அரசால் தடை செய்யப்படுகிறது. அண்ணா மீதும் வழக்கு தொடுக்கப்படுகிறது. இதற்கான வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரூ.700 அபராதம் அல்லது சிறை என்றது. அபராதத் தொகையைச் செலுத்த மறுத்த அண்ணா சிறைக்குச் சென்றார்.

கட்சியைத் தொடங்கி ஒரு வருடம் கூட ஆகாத நிலையில், இளைஞர்களிடம் அதிகம் செல்வாக்குள்ள அதன் பொதுச்செயலாளரை சிறையில் அடைத்தது மக்களை கொந்தளிக்க செய்தது. எதிர்ப்புகள் அதிகமான நிலையில் அண்ணா 10 நாட்களில் விடுதலை செய்யப்படுகிறார்.

1967-ம் ஆண்டு அண்ணா உருவாக்கிய திமுக இன்றும் ஆட்சியில் இருக்கிறது என்றால் அதற்கு முழுமுதற் காரணம் திமுகவில் அண்ணா ஏற்படுத்திய கட்டமைப்பு. கிராமங்களில் இருப்பவர்களைக் கூட நேரடி அரசியலிலும் அது குறித்த விவாதங்களிலும் ஈடுபட வைத்தவர் அண்ணா. அதன் பின் வந்த கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர். போன்றோர் கட்சியின் கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றாலும் அடித்தளம் அமைத்தது அண்ணா என்பதை மறுத்துவிட முடியாது.

தற்கால அரசியலில் பெரியார் அதிகம் விமர்சிக்கப்படலாம், கருணாநிதி அதிகம் விமர்சிக்கப்படலாம். ஆனால் திமுகவை தொடங்கிய அண்ணாவை விமர்சிப்போர் மிகக் குறைவு. அனைத்து தரப்பினராலும் எதிர்க்கட்சித் தலைவர்கள் உட்பட அனைவரையும் நேசிக்க வைத்தவர். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என அனைவரையும் பாராட்டியவர்.

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு

பதின்ம வயதுகளில் இருந்தே பொது மேடைகளில் பேசி வளர்ந்தவர் தான் என்றாலும் தனது வார்த்தைகளால் எதிரணியை மடக்கத் தெரிந்தவர் அண்ணா. 'எதிர்க்கட்சி சரியில்லை என்று காங்கிரஸ் கட்சியினர் அடிக்கடி சொல்வதைப் பார்த்தால், விரைவில் நீங்களே அந்தக் குறையை போக்கிவிடுவீர்கள் என்று எண்ணுகிறேன்... ' நாங்கள் ஒரு காலத்தில் நீங்கள் இப்போது அமர்ந்திருக்கும் இடத்தில் அமர வேண்டியவர்கள் என்பதால் பொறுப்புணர்ந்து அடக்கத்துடன் கூறுகிறேன் என்று தீர்க்கதரிசனத்துடன் குறிப்பிட்டார், அண்ணா.

டீசண்ட் அண்ட் டெவலப்மெண்ட் பாலிடிக்ஸ் என்ற சொற்றொடர் சமீப நாட்களில் அதிகம் கேள்விப்பட்ட ஒன்று. அதை தனது வாழ்நாளில் வாழ்ந்து காட்டியவர் அண்ணா. 1967-ம் ஆண்டு அது. தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருந்த சமயம். காங்கிரஸ் தொண்டர்களிடம் சோர்வும், திமுகவினரிடம் உற்சாகமும் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. காமராஜர் தோற்றுவிட்டார். காமராஜரின் தோல்வியை காங்கிரஸாரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மறுபுறமோ திமுக அதை கொண்டாடித்தீர்க்கிறது. 1949-ம் ஆண்டு ஆரம்பித்த திமுக முதல்முறையாக ஆட்சியைப் பிடிக்கிறது. அண்ணா முதல்வராகப்போகிறார். ஆனால் அண்ணா கலக்கத்துடனே இருந்தார். ''வெற்றியை கொண்டாடுகிறோம் என்ற ரீதியில் காங்கிரஸ் கட்சியை சங்கடப்படுத்த வேண்டாம். காமராஜர் போன்ற அனுபவசாலிகள் தோற்றது நமக்கும் தோல்வி போன்றதே. சட்டமன்றத்தில் அவர் இருந்திருந்தால், நாம் இன்னும் சிறப்பாகச் செயல்பட அது உதவியிருக்கும்" என்றார் அண்ணா. 'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு' என மனமுவந்து கூறிய நாகரிக அரசியலின் ஆணிவேரான அதே அண்ணாதான்!

அண்ணாவின் தோல்வி

1957-ம் ஆண்டு தேர்தலில் நின்ற திமுக 15 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 1962-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 50 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் கட்சியின் முக்கியத்தலைவர்கள் அனைவரும் தோற்றனர். அண்ணா உட்பட. கருணாநிதி மட்டுமே வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து, தம்பிமார்கள் அண்ணாவிடம் கேட்டபோது அவர், "புனித ஜெருசலத்துக்காக ஐரோப்பிய நாடுகள் போரிட்டன. ஒப்பந்தம் ஏற்பட்டது. ஒரு நிபந்தனையும் விதிக்கப்பட்டது. ஐரோப்பிய படைக்குத் தலைமை வகித்த ரிச்சர்டு மன்னன் உள்ளே வரக் கூடாது. மற்றவர்கள் வரலாம் என்பதே அந்த நிபந்தனை. இதைக் கேட்ட அந்த மன்னன், நான் உள்ளே போகாவிட்டால் என்ன?.., என் படைகள் உள்ளே போகிறது" என்றான். அதுபோல் சட்டசபையில் என்னை நுழையவிடவில்லை. அதனால் என்ன?.., என் தம்பிமார்கள் 50 பேர் சட்டசபை செல்கின்றனர். அவர்கள் உருவில் நான் செல்கிறேன்" என்றார்.

ஆனால் திமுகவிற்கு தோல்வியிலும் வெற்றி என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். கட்சியின் முக்கியத்தலைவர்கள் தோற்றாலும் தென் தமிழ்நாட்டில் கட்சி காலூன்ற ஆரம்பித்தது. பல தொகுதிகளில் திமுக வென்றது. சட்டமன்ற தேர்தலில் தோற்றிருந்தாலும் அடுத்த சில தினங்களில் வந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று எம்.பியானார் அண்ணா.

ரூபாய்க்கு 3 படி லட்சியம், ஒரு படி நிச்சயம்

1967 தேர்தலில் கட்டாயம் வென்றே தீர வேண்டும் என்று நினைத்த திமுக பலமான கூட்டணிகளை அமைத்து தேர்தலைச் சந்திக்கிறது. அப்போது அரிசியின் விலை தமிழகத்தில் விண்ணை முட்டும் அளவில் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியினரைப் பார்த்து அண்ணா சவால் விடுக்கிறார். ரூபாய்க்கு மூன்று படி அரிசி போடுவதாக காங்கிரஸ் ஒப்புக்கொண்டால் திமுக தேர்தலில் இருந்தே விலகிக் கொள்வதாக அறிவிக்கிறார். அதெப்படி முடியும், திமுகவால் முடியுமா?.., என காங்கிரஸ் கட்சியினர் திருப்பி கேள்வி கேட்டனர். ரூபாய்க்கு 3 படி லட்சியம், ஒரு படி நிச்சயம் என்கிறார் அண்ணா. அதுவரை திமுக அமைச்சர்கள் ஊதியம் பெற மாட்டார்கள் என்றும் அறிவிக்கிறார்.

21 ஆண்டுகாலம் ஆட்சியில் நீடித்த காங்கிரஸ் கட்சியை முடிவுக்கு கொண்டு வந்த தேர்தல் அது. அதற்கடுத்து வந்த தேர்தல்களில் தமிழ்நாட்டில் தேசிய கட்சியினர் ஆட்சியில் அமர முடியாது என அக்காலத்தில் எவரும் நினைத்திருக்க மாட்டார்கள். திமுக 138 தொகுதிகளிலும் காங்கிரஸ் 49 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் 42% திமுகவின் வாக்கு சதவீதம் 41% கூட்டணிக் கட்சிகளின் வாக்கு சதவீதம் 12% . கூட்டணியின் முக்கியத்துவத்தை உணர்ந்த அண்ணா காங்கிரஸ் கட்சியின் எதிர்வாக்குகளை சிதறாமல் பார்த்துக் கொண்டார். பெரியாருடன் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தேர்தலில் வெற்றி பெற்ற பின் பெரியாரை சந்தித்து வாழ்த்து பெற்றார் அண்ணா.

அதுவரை காங்கிரஸ் அமைச்சர்கள் ஆண்டவன் பேரால் உறுதி மொழி எடுத்து வந்த சூழலில் திமுக அமைச்சர்கள் உளமார உறுதியேற்கிறேன் என்றனர். தேசிய அளவில் அனைத்து மாநிலங்களிலும் கோலோச்சிக்கொண்டிருந்த தேசியக் கட்சியை வீழ்த்தி அண்ணா ஆட்சியைக் கைப்பற்றினார். மிகக் குறைந்த காலமே ஆட்சியில் இருந்தாலும் அவரது காலத்தில் அவர் கொண்டு வந்த திட்டங்கள் மகத்தானது. அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட மக்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காதது.

``அண்ணாதுரை கொண்டு வந்தவற்றை எல்லாம் மாற்றவேண்டும் என்று எண்ணும்போதே, `மக்கள் வெகுண்டெழுவார்களே என்கிற அச்சமும் கூடவே எழும் இல்லையா?’.., அந்த அச்சம் இருக்கிற வரையில் இங்கு யார் ஆண்டாலும், அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள்’’ என்ற அண்ணாவின் கூற்றுக்கேற்ப,

இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், எத்தனை கட்சிகள் தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்தாலும் அண்ணாவின் அரசையும் அவரையும் மக்கள் தங்களது நினைவுகளில் சுமந்து கொண்டிருப்பர் என்பதே உண்மை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com