’ மனித பற்கள் ஆபத்தான ஆயுதம் அல்ல ’ - மும்பை உயர் நீதிமன்றத்தின் கருத்து! என்ன நடந்தது?
மும்பை உயர்நீதிமன்றத்தில் , பெண் ஒருவர் மைத்துனி தன்னை கடித்ததாகவும் . இது தீங்கு விளைவிக்கும் ஆயுதத்தால் தாக்கியதற்கு சமம் என்று கூறி புகார் அளித்தநிலையில், பற்கள் ஆபத்தான ஆயுதம் அல்ல என்று நிதிபதிகள் கருத்து தெரிவித்திருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது.
கடந்த 2020 ஏப்ரலில் பெண் ஒருவர் தனது மைத்துனிக்கு எதிராக புகார் அளித்திருந்தார். அப்புகாரில் அவர், “எனக்கும் எனது மைத்துனிக்கும் ஏற்பட்ட சண்டையில் அவர் என்னை கடித்தார். ஆபத்தான ஆயுதத்தால் எனக்கு தீங்கு விளைவித்தார்” என்று கூறியிருந்தார்.
இதுதொடர்பாக மைத்துனி மீது இந்திய தண்டனை சட்டத்தின் 324 வது பிரிவின் கீழ் (ஆபத்தான ஆயுதத்தைப்பயன்படுத்தி காயப்படுத்துதல்) வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்துசெய்யக்கோரி பெண்ணின் மைத்துனி அவுரங்காபாத் உயர்நீதிமன்றத்தில் மனிதாக்கல் செய்திருந்தார்.
இவ்வழக்கை நீதிபதிகள் விபா கன்கன்வாடி மற்றும் சஞ்சய் தேஷ்முக் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு கூறுகையில்,
” மனித பற்களை ஆபத்தான ஆயுதம் என்று கூற முடியாது. இந்திய தண்டனை சட்டப்பிரிவு 324- ன் கீழ் மரணம் அல்லது கடுமையான ஆயுதங்களை பயன்படுத்தினால் மட்டுமே வழக்கு பதிவு செய்ய முடியும். ஆனால், பாதிக்கப்பட்டவர் வழங்கிய மருத்துவ சான்றிதழில் பற்களின் அடையாளங்கள் மட்டுமே உள்ளது என்பதால் இதனை 324 ன் கீழ் கொண்டுவர முடியாது. அப்படி செய்வது சட்ட விதிகளை மீறுவதாகும். எனவே, குற்றம் சாட்டப்பட்டவரின் மனுவை ஏற்று இந்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது.” என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.