கரூர் | 'மனைவி தனிமையில் பாலியல் படங்களைப் பார்ப்பது கணவனுக்கு கொடுமை இழைப்பதாகாது' - நீதிமன்றம்
மனைவி தனிமையில் பாலியல் படங்களைப் பார்ப்பது கணவனுக்கு கொடுமை இழைப்பதாகாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கூறியுள்ளது.
தன்னுடைய மனைவிக்கு பால்வினை நோய் இருப்பதாகவும் அவர் பாலியல் படங்களைப் பார்த்து சுய இன்பத்தில் ஈடுபடுவதாகவும் கூறி விவாகரத்து வழக்கு தொடர்ந்த நபருக்கு கரூர் குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து வழங்க மறுத்தது.
இதற்கு எதிராக அந்த நபர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தனது மனைவிக்கு பால்வினை நோய் இருப்பதை நிரூபிப்பதற்கான எந்த ஆதாரத்தையும் மனுதாரர் வழங்கவில்லை என்று தெரிவித்தனர். மேலும், ஒரு பெண் தனிமையில் பாலியல் படங்களைப் பார்ப்பதையும், சுய இன்பத்தில் ஈடுபடுவதையும், எந்த வகையிலும் அவரது கணவருக்கு இழைக்கப்படும் கொடுமையாகக் கருத முடியாது என்று கூறி மேல் முறையீட்டு மனுவை நிராகரித்தனர். அதே நேரம் வாழ்க்கைத் துணையை பாலியல் படங்களைப் பார்க்குமாறு வற்புறுத்துவதை விவாகரத்துக்கான காரணமாக ஏற்க முடியும் என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.