ராமநாதபுரம்: மேக வெடிப்பு காரணமாக கொட்டித் தீர்த்த கனமழை – குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்
செய்தியாளர்: அ.ஆனந்தன்
வங்கக் கடலில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை தொடர் கனமழை பெய்தது. ராமநாதபுரம் மாவட்டத்தின் கடலோர பகுதிகளான ராமநாதபுரம், உச்சிப்புளி, மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம், ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர் கனமழை பெய்தது. மேக வெடிப்பு காரணமாக நேற்று மதியம் கனமழை பெய்தது.
இதனால் மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழை நீரும் கழிவு நீரும் கலந்து புகுந்தது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டு குழந்தைகளும் முதியோர்களும் கர்ப்பிணிகளும் சிரமம் அடைந்தனர். இதுகுறித்து புதிய தலைமுறை நேரலையில் செய்தி ஒளிபரப்பான நிலையில், உடனடியாக வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய்த் துறையினர் உள்ளிட்டோர் நேரில் சென்றனர்.
இதனையடுத்து குடியிருப்புகளில் தேங்கிய தண்ணீரை அகற்ற உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வீடுகளில் உள்ள தண்ணீரை தீயணைப்புத் துறை வாகனம் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது. திடீரென சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் தனியார் தங்கு விடுதிக்குச் சொந்தமான கார் பார்க்கிங்கில் நிறுத்தி வைத்திருந்த சுற்றுலா பயணியின் கார் மீது மரம் விழுந்து கார் சேதமடைந்தது.
இந்நிலையில், நேற்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரையிலான 10 மணி நேரத்தில் ராமேஸ்வரத்தில் 41 செ.மீ. மழை பதிவாகியுள்ள நிலையில், மண்டபத்தில் 26 செ.மீ மழையும், பாம்பன் பகுதியில் 24 செ.மீ மழையும், தங்கச்சிமடத்தில் 32 செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.