கனமழை எச்சரிக்கை: 11 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கும், 6 மாவட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை!
தமிழ்நாடு - புதுச்சேரியில், கனமழை பொழியும் மாவட்டங்களில், பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, வரும் 29-ஆம் தேதி வரை, தமிழ்நாடு - புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில பகுதிகளில் அதிகனமழை பொழிய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களிலும் புதுச்சேரி மாநிலத்திலும் பலத்த மழை பொழிந்து வருகிறது.
நாகை மாவட்டத்தில் கனமழை கொட்டிவரும் நிலையில், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும் நடவடிக்கையில் நகராட்சி நிர்வாகம் களமிறங்கியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை காரணமாக சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீரில் குடிநீர் குழாய்கள் மூழ்கியுள்ளன. இதனால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், திருத்துறைப்பூண்டிக்கு தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை குழுவிலிருந்து 26 பேர் சென்றனர். மீட்புப் பணிகளை மேற்கொள்ள அவர்கள் தயார் நிலையில் உள்ளனர். கனமழை எச்சரிக்கையை அடுத்து டெல்டா மாவட்டங்களுக்கு ஏழு தேசிய பேரிடர் மீட்புப்படையினர் அனுப்பப்பட்டுள்ளனர்.
கனமழை காரணமாக இன்று 11 மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருச்சி, மயிலாடுதுறை, நாகை, கடலூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், விழுப்புரம், திருவள்ளூர், திருவாரூரில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது.
6 மாவட்டங்களில் பள்ளுகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் ஒன்றியத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.