IPL மெகா ஏலம் | லக்னோவுக்குச் சென்ற ரிஷப் பண்ட்.. உருக்கமான பதிவிட்ட டெல்லி அணி உரிமையாளர்!
ஐபிஎல் 18-வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் நடைபெற உள்ளது. இதையடுத்து, ஐபிஎல் 2025 மெகா சீசனுக்கான ஏலம் சவுதி அரேபியாவில் ஜெட்டா நகரில் இரண்டு நாட்கள் (நவ.24, 25) நடைபெற்றது. இதில் பங்கேற்ற 10 அணிகளும் தங்களுக்கு விருப்பமான வீரர்களைத் தேர்வு செய்தது. இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். மொத்தத்தில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர். இதில் டெல்லி அணியின் முன்னாள் கேப்டனான ரிஷப் பண்டை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகையான ரூ.27 கோடிக்கு வாங்கியது.
ரிஷப் பண்ட் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் சென்றது குறித்து டெல்லி அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ஜிந்தால், "உங்களை எப்போதும் என் இளைய சகோதரனாகவே பார்க்கின்றேன். இதனை எனது அடிமனதிலிருந்து சொல்கிறேன். நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். உங்களது முயற்சிக்கு எப்போதும் நான் துணை நிற்பேன். எங்கள் அணியிலிருந்து நீங்கள் விலகுவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை. அதேபோன்று எங்களது அணியுடன் உங்களை தக்கவைக்க நான் எவ்வளவோ முயன்றேன். ஆனாலும் நீங்கள் வெளியேறியதில் வருத்தம். இருந்தாலும் நாங்கள் உங்களை எப்போதுமே நேசிக்கிறோம்.
நீங்கள் எப்போதுமே டெல்லி அணியின் ஒரு முக்கிய வீரர்தான். நிச்சயம் ஒருநாள் உங்களுடன் மீண்டும் இணைவோம். எங்கள் அணிக்காக நீங்கள் செய்த பல விஷயங்களுக்கு நன்றி. சென்று வாருங்கள் சாம்பியன்! உலகமே உங்கள் காலடியில்தான் இருக்கின்றது. டெல்லி அணிக்கு எதிராக நீங்கள் விளையாடும் ஆட்டத்தை தவிர மற்ற எல்லாவற்றுக்குமே நான் உங்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக ரிஷப் பண்ட், “இளம் வீரராக வந்த என்னைப் பல ஆண்டுகள் பார்த்துக்கொண்ட டெல்லி அணிக்கு நன்றி. உங்களுடன் இருந்த என்னுடைய பயணம் மகிழ்ச்சியாக இருந்தது. ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொண்டு நான் வாழ்நாளில் கடினமான நிலையில்கூட எனக்கு துணை நின்று ஆதரவளித்தார்கள். ஒரு குடும்பம்போல் நான் இருந்தேன். இந்தப் பயணம் மிகவும் ஸ்பெஷலானது. குட்பை சொல்வது அவ்வளவு எளிதல்ல” எனத் தெரிவித்திருந்தார்.
முன்னதாக கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி, டெல்லியிலிருந்து உத்தராகண்ட்டிற்கு தன் காரில் சென்றபோது அதிகாலையில் கோரமான விபத்தில் சிக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு, களத்திற்குத் திரும்பிய ரிஷப் பண்ட், மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்து சாதித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.