இன்று 19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. சென்னையிலும் மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தின் 19 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு வங்கக்கடல் பகுதியில், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல இடங்களில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இடி, மின்னலுடன் மணிக்கு 40 கி.மீ. வேகத்தில், பலத்த காற்றுடன் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்துார், வேலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும், மேலும் அடுத்த 2 நாட்களுக்கு வடமாவட்டங்களில் கனமழை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை நேற்று கொட்டித் தீர்த்தது. குறிப்பாக, சிவகங்கை, திருப்பத்தூர், திருச்செங்கோடு, திண்டுக்கல், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. சென்னையின் பல பகுதிகளிலும் இரவில் இடி மின்னலுடன் மழை பெய்தது.