தருமபுரி, மயிலாடுதுறை மாவட்டங்களில் கடும் பனிமூட்டம் - வாகன ஓட்டிகள் அவதி
செய்தியாளர்கள்: சே.விவேகானந்தன், ஆர்.மோகன்
தருமபுரி:
ஃபெஞ்சல் புயல் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட தருமபுரி மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக அவ்வப்போது மேகமூட்டம் இருந்தாலும், வெயிலின் தாக்கமும் இருந்தது. இதையடுத்து நேற்று வரை மழை பெய்து வந்த நிலையில், இன்று காலை 7:00 மணிக்கு மேல், தருமபுரி, தொப்பூர், நல்லம்பள்ளி, அதியமான்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் திடீரென பனிமூட்டம் உருவானது.
இந்த பனிமூட்டம் கடுமையான பனிப்பொழிவை ஏற்படுத்தியது. இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்வோர் இப்பனிப் பொழிவால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் காணப்பட்டது. சாலையில் வாகன ஓட்டிகளும் இந்த பனி மூட்டத்தால் அவதிக்குள்ளாகினர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை, சீர்காழி, கொள்ளிடம், பூம்புகார், செம்பனார்கோவில்,திருக்கடையூர், தரங்கம்பாடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிபொழிவு ஏற்பட்டு காலை நேரத்தில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. 8 மணியை கடந்தும் பணியின் தாக்கம் நீடிப்பதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத சூழல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றர். பொதுமக்கள் முககவசம் அணிந்தபடி அத்தியாவசிய பணிகளுக்குச் செல்கின்றனர்.