சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. தலைமை காவலர் அதிரடியாக ‘பணிநீக்கம்’!
சென்னை வடபழனி காவல் நிலையத்தில் பணியாற்றிய தலைமைக் காவலர் வேலப்பன், சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறிதி செய்யபட்டதால் காவல் ஆணையாளர் அமல்ராஜ் உத்தரவின்படி அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை வடபழனி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தவர் வேலப்பன் (35). இவரது நண்பர் கோடம்பாக்கம் பகுதியில் வசித்து வருகிறார். வேலப்பன் நண்பர் வீட்டிற்கு சென்று மது குடித்ததாக கூறப்படுகிறது.
மதுபோதையில் நண்பர் தூங்கிக் கொண்டிருந்த போது நண்பரின் உறவினரின் 16 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. பயத்தில் அந்த சிறுவன் அலறி கூச்சலிட்டு தலைமைக் காவலர் வேலப்பனை டிவி ரிமோட்டால் தாக்கி விட்டு தப்பி ஓடியுள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுவன் அசோக் நகர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். அதன் பேரில் காவல் உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தலைமைக் காவலர் வேலப்பன் அந்த சிறுவனிடம் எல்லை மீறி நடந்தது உறுதி செய்யப்பட்டதால் வேலப்பன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
உடனடியாக தலைமைக்காவலர் வேலப்பன் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவரை பணி நீக்கம் செய்யவேண்டுமென பல்வேறு கண்டனங்கள் வலுத்தது. இந்நிலையில் காவல் ஆணையாளர் அமல்ராஜ் அவர்களின் உத்தரவின் பேரில் தலைமை காவலர் வேலப்பன் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

