”பெரியார் பட்டியலின மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டவர் அல்ல., பல சமயங்களில் அவர் சாதிய மற்றும் வர்க்க சார்புடன் நடந்து கொண்டார் என்ற தவறான குற்றச்சாட்டு அவர்மீது இன்றளவும் உள்ளது.”
அடிப்படையில் கூலி உயர்வு போன்ற பிரச்சனைக்களுக்கு பெரியார் ஆதரவு கொடுக்கவில்லை தான். காரணம் அவர் ஒரணா கூலியை இரண்டணாவாக உயர்த்த போராடுவதால் எந்த நன்மையும் நிகழப்போவதில்லை, உழைக்கும் மக்களுக்கு, முதலாளிகளுக்கு இணையான லாப பங்கீடு வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். கூலி உயர்வை போராடி பெறுவதால் அந்த இழப்பை முதலாளிகள் பொருளின் விலையில் சேர்ப்பார்கள்., விலைவாசி உயரும் அது உழைக்கும் மக்களின் தலையில் தான் மீண்டும் சுமையாக வந்து நிற்கும் என்பதே பெரியாரின் நிலைப்பாடு.
எனினும் வர்க்க ரீதியாகவும் சாதிய ரீதியாகவும் உழைக்கும் மக்கள் நசுக்கப்பட்ட போதெல்லாம் பெரியார் தனது எதிர்ப்பை பதிவு செய்யத் தவறியதில்லை. ”கீழவெண்மணி படுகொலை சமயத்தில் பெரியார் கோபால கிருஷ்ண நாயுடுவிற்கு ஆதரவாக இருந்தார். பெரியார் இனப்பற்றால் அச்சம்பவத்தை கண்டிக்கவில்லை.” என்றெல்லாம்., சமூகவலைதளங்களில் தற்போது விவாதிக்கப்படுகிறது.
உண்மையில் 1968 டிசம்பர் 25 இரவு கீழ வெண்மணியில் விவசாயக் கூலிகள் எரித்துக் கொள்ளப்பட்ட போது பெரியார் உடல்நலக் குறைவால் சென்னை மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். டிசம்பர் மாதம் 27 மற்றும் 29 தேதிகளில் வெளியான விடுதலை நாளிதழில் ஆசிரியர் கி.வீரமணி அதனை குறிப்பிட்டு இருப்பார்.
உடனடியாக பெரியார் எந்த எதிர்வினையும் செய்ய முடியவில்லை என்றாலும் பிறகு ’கீழவெண்மணியை தடுப்பது எப்படி’ என்ற தலைப்பில் 28.12.1968’ல் இரண்டு அறிக்கைகளை வெளியிட்டார் பெரியார். 12.1.1969 அன்று செம்பனார் கோவிலில் நடந்த கூட்டத்திலும் பெரியார் கீழவெண்மணி சம்பவத்தை கண்டித்துப் பேசியிருக்கிறார்.
கோபால கிருஷ்ண நாயுடுவிற்கு 1970 ஆம் ஆண்டு நாகப்பட்டிணம் நீதிமன்றம் பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது., அதனை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கிறார் கோபால கிருஷ்ண நாயுடு., நான்கு ஆண்டுகள் மூன்று மாதங்கள் தொடர்ந்த விசாரணையானது முடிந்த பிறகு நாயுடு மீது எந்தக் குற்றமும் இல்லை., காரில் செல்கிறவர் இறங்கி வந்து குடிசைகளை எரித்தார் என்பது நம்பும் படியாக இல்லை எனச் சொல்லி சென்னை உயர்நீதிமன்றம் கோபால கிருஷண நாயுடுவை விடுதலை செய்கிறது.
இந்த அறிய தீர்ப்பை எழுதியவர் நீதிபதி மகாராஜன். தீர்ப்பு சொல்லப்பட்டது, 1975 ஏப்ரல் 6. இந்த தீர்ப்பை எதிர்த்து பெரியார் ஏதும் கூறவில்லை மவுனமாக இருந்தார் என்று குற்றம் சாட்டப்படுகிறது. ஆம் அவர் அன்று மவுனமாகத் தான் இருந்திருக்க முடியும் காரணம் தீர்ப்பு வெளியாவதற்கு இரண்டு வருடம் முன்பு அதாவது 1973 டிசம்பரில் பெரியார் இறந்து போனார்.
இன்னொரு முக்கியமான செய்தி., கோபால கிருஷ்ண நாயுடு கீவளூர் வந்திருந்த பெரியாரை சந்திக்க முயற்சிக்கிறார்., ஆனால் பெரியார் “என் கிட்ட என்ன சொல்ல நினைக்கிறாரோ அத கோர்ட்ல சொல்லச் சொல்லு. அவரையெல்லாம் பார்க்கவே பிடிக்கலை. அவரை கண்ணால பார்க்க விருப்பமில்லை. போ. போ. போகச் சொல்லு”என கோபத்துடன் மறுத்துவிட்டார். அப்போது முதல்வராக இருந்த அண்ணா கீழவெண்மணி கலவரத்தை விசாரிக்க கணபதியா கமிஷன் என்ற தனிநபர் கமிஷனை அமைத்தார். அதில் சாட்சியம் அளித்த நாகை எஸ்.எஸ்.பாட்சா இதனை பதிவு செய்துள்ளார்.
(சுப்ரமணி).