தமிழ்நாட்டில் குறையும் நிலத்தடி நீர்.. 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைவு!
தமிழ்நாட்டில் கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான நிலத்தடி நீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிலவரப்படி, தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் சரிந்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகபட்சமாக கோயம்புத்தூரில் நிலத்தடி நீரின் ஆழம் 6 புள்ளி பூஜ்ஜியம் ஒன்பது மீட்டராகவும், ஈரோட்டில் 5 புள்ளி 4 மீட்டராகவும், கள்ளக்குறிச்சியில் 4 புள்ளி ஒன்பது ஐந்து மீட்டராகவும் நீர்மட்டம் குறைந்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை போதிய மழையைத் தராததால், அணைகள் மற்றும் நீர்நிலைகளில் நீர் இருப்பு குறைந்துள்ளது. எல் நினோ தாக்கமும், வறண்ட வானிலையும் நிலத்தடி நீர் மட்டம் குறைய காரணமாக அமைந்துள்ளன. எனவே நீர் ஆதாரங்களைப் பெருக்குவதற்கும் ஏரிகள் மற்றும் அணைகளை நிரப்புவதற்கும், தற்போது வடகிழக்குப் பருவமழையே மாநிலத்தின் ஒரே நம்பிக்கையாக உள்ளது. மேலும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த மழைநீர் சேகரிப்பு முறைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

