அரசுப் பள்ளிகள் மூடல்.. குறைந்த மாணவர்கள் வருகை.. வெளியான அதிர்ச்சி விவரம்!
தமிழ்நாட்டில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு தொடக்கப் பள்ளிகளில் 30க்கும் குறைவான மாணவர்களே படித்துவருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விரிவான செய்தியைப் பார்க்கலாம். தமிழ்நாட்டில் உள்ள 14,829 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 30க்கும் குறைவான மாணவர்களே பயின்று வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதில் 3,027 பள்ளிகளில் 10க்கும் குறைவான மாணவர்களும் 6,662 அரசு தொடக்கப் பள்ளிகளில் 20க்கும் குறைவான மாணவர்களும் படிக்கின்றனர்.
திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளிலேயே இந்நிலை அதிகளவில் உள்ளது. இந்தியா முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை சரிந்துவருகிறது. பல அரசுப் பள்ளிகள் மூடப்படுகின்றன. மத்திய அரசின் 'UDISE+' தரவுகளின்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 7.39 லட்சம் குறைந்துள்ளது. மாணவர் சேர்க்கை இல்லாததால் தமிழ்நாட்டில் 246 அரசு தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
அரசுப் பள்ளிகளில் ஆங்கிலக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டாலும் தனியார் பள்ளிகளை நாடும் போக்கு பெற்றோரிடையே அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் இல்லாததால் ஆரம்பத்தில் தனியார் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்க்கும் பெற்றோர், அங்கேயே கல்வியைத் தொடர்வதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
30க்குக் குறைவான மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் ஓர் ஆசிரியரே தலைமை ஆசிரியராகவும் செயல்பட்டு அனைத்துப் பாடங்களையும் எடுக்க வேண்டியுள்ளது. இதனால் இந்தப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக கல்வியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அரசுத் தொடக்கப் பள்ளிகளில் குறைந்து வரும் மாணவர் சேர்க்கையை உயர்த்தவும், தொடக்கக் கல்வியின் தரத்தை மேம்படுத்தவும் போதுமான ஆசிரியர்களை நியமித்தல், மழலையர் வகுப்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

