“திருவண்ணாமலை கோவிலை சுற்றி அசைவ உணவகங்கள் இருந்ததை பார்த்து வருத்தமடைந்தேன்” ஆளுநர் வேதனை!
இரண்டு நாள் பயணமாக திருவண்ணாமலை வந்துள்ள தமிழக ஆளுநர் R.N. ரவி இரண்டாவது நாளான நேற்று காலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு தன் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய வந்தார். திருமஞ்சனம் கோபுர வழியாக உள்ளே வந்த அவருக்கு கோவிலின் சார்பாக பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் அண்ணாமலையார் சன்னதிக்குள் சென்று வழிபட்டார். தொடர்ந்து உண்ணாமலை அம்மன் சன்னதிக்கு சென்று வழிபட்டார். அடுத்ததாக பாதாள லிங்கம் சென்று வழிபட்டார். கோவிலின் சார்பாக அவருக்கு மாலை மரியாதையுடன் மரியாதை செய்யப்பட்டது.

பின்னர் கிரிவல பாதையில் நிருதிலிங்கம் என்ற இடத்திலிருந்து திரு நேர் அண்ணாமலை என்ற இடம் வரை ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு மனைவி மகளுடன் அவரும் கிரிவலம் நடந்து சென்றார்.
இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலை சுற்றி அசைவ உணவகங்கள் இருந்ததை பார்த்து வருத்தமடைந்தேன். அசைவ உணவகங்கள் தொடர்பாக தங்கள் வேதனையை பக்தர்கள் என்னிடம் பகிர்ந்து கொண்டனர். உணவு என்பது ஒருவரது தனிப்பட்ட விருப்பம் என நம்புகிறேன். அதேநேரம் அருணாசலேஸ்வரர் பக்தர்களின் உணர்வுகளுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.