கோவை பொள்ளாச்சியை அடுத்துள்ள கோட்டூர் மலையாண்டிபட்டிணம் பகுதியில் அமைந்துள்ள ஆதி அமரநாயகி உடனமார்ந்த ஆதிசங்கரர் திருக்கோயில் குடமுழுக்கு திருவிழா இன்று நடைபெற உள்ளது. முன்னதாக நேற்று நடைபெற்ற விழாவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசிய போது, “தமிழையும், ஆன்மிகத்தையும் பிரிக்க முடியாது. ஆனால், தமிழகத்தில் தமிழுக்கும், ஆன்மிகத்துக்கும் சம்பந்தமில்லை என்ற தோற்றம் உள்ளது. அதில் உண்மை கிடையாது. ஆன்மிகவாதிகள் மதிக்கப்பட வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள கோவில்கள் பராமரிக்கப்பட வேண்டும். கோவில் வருமானத்தை கோவில்களுக்கு செலவிட வேண்டும். கோவில்களை நல்ல முறையில் பராமரித்து அர்ச்சகர்களுக்கு அதிக சன்மானம் வழங்க வேண்டும்.
ராமராஜ்யம் என்றால் கிராம ராஜ்யமே! கிராமத்தில் ஆன்மிகம் தழைக்க வேண்டும். ரஜினி, யோகி ஆதித்தனார் காலில் விழுந்ததற்கு, ‘இளம் வயதாக இருந்தாலும் சன்னியாசியாக இருந்தால் காலில் விழுவது எனது பழக்கம்’ என ரஜினியே கூறிவிட்டார். ஆனால் ‘யோகி ஆதித்யநாத் யோகியா? சன்னியாசியா?’ என முரசொலி ஆராய்ச்சி செய்கிறது. யோகி ஆதித்யநாத், ஐந்து முறை எம்.பி.,யாக இருந்துள்ளார். சன்னியாசியாக இருந்து இந்த பதவிக்கு வந்துள்ளார் அவர். Son-ஐ வைத்து பதவிக்கு வந்தவர்களுக்கு சன்னியாசி பற்றி தெரியாது.
ரஜினி காலில் விழுந்ததால் யோகி மற்றும் ரஜினியை தாக்கிப் பேசுகின்றனர். நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதை செய்ய வேண்டும் என நினைப்பது சர்வாதிகாரமா, ஜனநாயகமா? கடவுள் இல்லை என்றால், நீங்களும் கடவுள் இல்லை என கூற வேண்டும். கருப்பு போட்டால், நீங்களும் கருப்பு போடணும். காலில் விழக் கூடாது என்றால், நீங்கள் காலில் விழுக் கூடாது. நீங்கள் எங்கெல்லாம் காலில் விழுகின்றனர் என நாட்டு மக்களுக்குத் தெரியும். கலாசார பழக்கத்தை அவர் வழியில் விட்டுவிட வேண்டும்” என தெரிவித்தார்.