முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்pt web

“அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படும் வரை நாம் ஓயமாட்டோம்!” உறுதிபடச் சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின்

“மாநில உரிமைகளையும், உண்மையான கூட்டாட்சியையும் நிலைநாட்டும் நமது போராட்டம் தொடரும் என்றும் சட்டமுன்வடிவுகள் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்கு காலக்கெடு விதிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படும் வரை நாம் ஓயமாட்டோம்!” - முதலமைச்சர்
Published on

மாநில சட்டமன்றங்களில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர், ஆளுநர் முடிவெடுப்பதற்கு நீதிமன்றங்கள் காலக்கெடு எதுவும் நிர்ணயிக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட அமர்வு தெளிவுபடக் கூறியுள்ளது. அதேசமயம் மசோதாக்கள் மீது நிரந்தரமாக முடிவெடுக்காமல் அப்படியே வைத்திருக்கும் கட்டுப்பாடற்ற அதிகாரங்கள் ஆளுநருக்கு இல்லை என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பல்வேறு உரையாடல்களை அரசியல் களத்தில் ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் இதையொட்டி தங்களது நிலைப்பாடுகளைத் தெரிவித்து வருகின்றனர். 

மசோதாக்கள் விஷயத்தில் குடியரசு தலைவர், ஆளுநர் ஆகியோரின் திருப்தி என்பது பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வருவதாக கபில் சிபல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், சட்டமன்றமே பிரதானம் என மதிக்கப்பட வேண்டிய தேவை இருப்பதாக நீதிபதிகள் கூறியிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். இந்த கருத்து எதிர்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் குறிப்பிட்டுள்ளார். குடியரசு தலைவர் திரெளபதி முர்மு உச்ச நீதிமன்றத்துக்கு சுட்டிக்காட்டிய குறிப்பு குறித்த வழக்கில் மேற்கு வங்கம் சார்பில் கபில் சிபல் ஆஜராவது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தின் உச்சத்தில் இந்தியா.. மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இருக்காது..

பாஜக தரப்பினரோ இந்த தீர்ப்பினை வரவேற்று கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். உதாரணத்திற்கு, மாநில பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன் இது தொடர்பாகப் பேசுகையில், ஜனாதிபதி மற்றும் ஆளுநரின் உரிமைகளை இந்தத் தீர்ப்பு உறுதி செய்துள்ளது என்றும், அருமையான வரவேற்கப்பட வேண்டிய கருத்து என்றும் கரு. நாகராஜன் தெரிவித்திருக்கிறார்.

முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்pt

இந்நிலையில்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுதொடர்பான கருத்து ஒன்றைப் பதிவு செய்திருக்கிறார். “மாநில உரிமைகளையும், உண்மையான கூட்டாட்சியையும நிலைநாட்டும் நமது போராட்டம் தொடரும்!” என்று பதிவிட்டிருக்கும் முதலமைச்சர், “சட்டமுன்வடிவுகள் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்குக் காலக்கெடு விதிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படும் வரை நாம் ஓயமாட்டோம்!” என்று தெரிவித்திருக்கிறார்.

முதலமைச்சர் கூறுகையில், “குடியரசுத் தலைவரின் கேள்விகளுக்கு உச்சநீதிமன்றம் அளித்துள்ள விளக்கங்கள் ஆளுநருக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் பெற்ற 8 ஏப்ரல் 2025 தீர்ப்பின் மீது எந்தத் தாக்கத்தையும் செலுத்தாது.

சொல்லப் போனால்,

* மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் ஆட்சியைச் செலுத்த வேண்டும், மாநிலத்தில் இரண்டு அதிகார மையங்கள் இருக்க முடியாது.

 * அரசியலமைப்புச் சட்டத்தின் சட்டகத்துக்குட்பட்டே அரசியலமைப்புப் பதவியில் இருப்போர் செயல்பட வேண்டுமே ஒழிய, அரசியலமைப்பை மீறிச் செயல்படலாகாது!

* சட்டமுன்வரைவுக்கு ஒப்புதல் மறுப்பது / (தமிழ்நாடு ஆளுநர் செய்தது போல) காலவரையின்றி ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைப்பது எனும் நான்காவது விருப்பத் தேர்வு ஆளுநருக்கு இல்லை.

* மசோதாக்களின்மீது முடிவெடுக்காமல் காலவரையின்றி ஆளுநர் தாமதம் செய்ய இயலாது. அப்படி, எந்த விளக்கமும் இல்லாமல் நீண்டகாலம் இழுத்தடித்தால், மாநிலங்கள் நீதிமன்றங்களை அணுகலாம். ஆளுநர்கள் வேண்டுமென்றே தாமதிப்பதற்கு எதிராக வழக்கு தொடுத்து, கேள்விக்குட்படுத்தி நியாயம் பெறலாம்.

-என்பனவற்றைத் தனது விளக்கத்தில் உச்சநீதிமன்ற அமர்வு மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், புனித சேவியர் கல்லூரி, அகமதாபாத் v. குஜராத் அரசு (1974) 1 SCC 717 வழக்கின் தீர்ப்பில் (பத்தி 109), 9 நீதிபதிகள் கொண்ட அமர்வானது, "நீதிமன்றங்கள் தெரிவிக்கும் கருத்துகள் என்பவை அரசு தலைமை வழக்கறிஞர்கள் தெரிவிக்கும் கருத்துகளைப் போன்றவை என்பதைக் கடந்து அவற்றுக்கென எந்த மதிப்பும் இல்லை எனத் தெளிவாகக் கூறியுள்ளது.

*காலவரையின்றிக் காலம் தாழ்த்தலாம்,

*சட்டமுன்வடிவுகளுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் மறுக்கலாம் எனும் தமிழ்நாடு ஆளுநர் அவர்களின் கூற்றை உச்சநீதிமன்றத்தின் நேற்றைய கருத்து மீண்டுமொருமுறை நிராகரித்துள்ளது.

தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் உட்பட மாநில அரசுகளுடன் மல்லுக்கட்டும் அனைத்து ஆளுநர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் வழியில் செயல்பட வேண்டும் என்பதையும், மக்களின் விருப்பத்தைச் சட்டமியற்றி நிறைவேற்றும்போது, வேண்டுமென்றே ஒப்புதல் அளிக்காமல் காலத்தைக் கடத்தினால் நீதிமன்றங்களில் அதற்குப் பதில் சொல்லியாக வேண்டுமென்பதையும் நமது சட்டப் போராட்டத்தின் மூலம் கட்டாயமாக்கியுள்ளோம்! அரசியல்சட்டப்பிரிவு 361-க்குப் பின்னால் ஆளுநர்கள் ஒளிந்துகொள்ள முடியாது என்பதையும் உறுதிப்படுத்தி உள்ளோம்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்pt web

அரசியல் சட்டத்தால் அமையப்பெற்ற எந்தப் பதவியும் அச்சட்டத்துக்கு அப்பாற்பட்டதில்லை என நான் திடமாக நம்புகிறேன். உயர்ந்த அரசியலமைப்புப் பதவிகளில் இருப்போரே அரசியலமைப்புச் சட்டத்தை மீறி நடந்தாலும், நீதிமன்றங்கள்தான் ஒரே நம்பிக்கை. ஆகவே, நீதிமன்றங்களின் கதவு தீர்வுபெறத் திறந்தே இருக்க வேண்டும். அது தனது கதவுகளை அடைத்தால், நமது அரசியலமைப்பின்படியான மக்களாட்சியில் சட்டத்தின் ஆட்சியைச் சிறுமைப்படுத்திவிடும்; அரசியல் உள்நோக்கத்தோடு செயல்படும் ஆளுநர்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பாக நடந்துகொள்வதை ஊக்குவிக்கும்.

தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தைச் சட்டங்களின்மூலம் நிறைவேற்ற, அரசியலமைப்புச் சட்டத்துக்குட்பட்டு அரசியலமைப்புக் கருவிகள் செயல்படுவதை உறுதிசெய்யத் தொடர்ந்து உழைப்போம்! எங்கள் வாக்கைக் காப்பாற்றுவோம்!” எனத் தெரிவித்திருக்கிறார்.

ஆளுநரின் காலதாமதம் தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிவெடுக்காவிட்டால், மசோதாவுக்கு ஒப்புதல் அளிகக்கப்பட்டதாகக் கருதப்படும் என இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்னர் அளித்த தீர்ப்பை அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது எனக் கூறி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி. ஆர் கவாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்புச் சட்ட அமர்வு நிராகரித்துள்ளது.

முன்னதாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, மறுநிறைவேற்றம் செய்யப்பட்ட மசோதாக்கள் மீது ஆளுநர் ஒரு மாதத்திலும், குடியரசுத் தலைவர் 3 மாதத்திலும் முடிவெடுக்க வேண்டும் என காலக்கெடு விதித்திருந்தது.

இது தொடர்பாக அரசமைப்பு சட்டம் வழங்கியுள்ள அதிகாரங்கள் தொடர்பாக குடியரசுத் தலைவர் 14 கேள்விகளை உச்ச நீதிமன்றத்திடம் எழுப்பியிருந்தார். இந்தக் கேள்விகள் தொடர்பான விசாரணையின் அடிப்படையில், அரசமைப்பச் சட்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது. மசோதாக்கள் விவகாரத்தில் முடிவெடுக்க  குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு காலக்கெடு விதிப்பது அரசமைப்புக்கு எதிரானது என உச்ச நீதிமன்ற அரசமைப்புச் சட்ட அமர்வு கூறியுள்ளது. அதே நேரம், காலவரையின்றி மசோதாக்களை நிறுத்தி வைப்பதற்கோ, கிடப்பில் போடுவதற்கோ ஆளுநர்களுக்கு அதிகாரமில்லை எனவும் அவ்வாறு செய்வது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு
உச்சநீதிமன்றம் தீர்ப்புமுகநூல்

ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கலாம். ஒப்புதல் அளிக்க விரும்பாத பட்சத்தில் உரிய காரணங்களோடு சட்டமன்றத்திற்கு திருப்பி அனுப்பலாம் எனவும் குறிப்பிட்டுள்ள அரசமைப்புச் சட்ட அமர்வு, இவையல்லாது மசோதாவை குடியரசுத் தலைவர் பரிசீலனைக்கு அனுப்புலாம் எனவும், இதை விடுத்து நான்காவது தேர்வு எதுவும் ஆளுநருக்கு கிடையாது எனவும் அரசமைப்பு அமர்வு தெளிவுபடுத்தியுள்ளது. ஆளுநர்கள் மசோதாக்களை நீண்டகாலம் கிடப்பில் போட்டால் அது தொடர்பாக நீதிமன்றங்கள் பரிசீலனை செய்யலாம் எனவும் அரசமைப்பு அமர்வு கூறியுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுதான் மாநிலத்தில் முதன்மையான அதிகார அமைப்பாக இருக்க முடியும் எனக் கூறியுள்ள அரசமைப்புச் சட்ட அமர்வு, ஆளுநர்கள் மாநில அரசுக்கு இடையூறு ஏற்படுத்தும் நடைமுறைகளை மேற்கொள்ளக்கூடாது எனவும் விளக்கியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com