அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி; ஆளுநர் ஒப்புதல்

அமைச்சர் செந்தில்பாலாஜியின் ராஜினாமா கடிதத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
செந்தில்பாலாஜி
செந்தில்பாலாஜிpt web

பண மோசடி வழக்கில் சிறையில் உள்ள செந்தில் பாலாஜி, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி, அதுதொடர்பான கடிதத்தை நேற்று இரவு முதல்வருக்கு அனுப்பியிருந்தார். அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் பதவியில் இருந்த செந்தில் பாலாஜி மீது வேலை வழங்க பணம் பெற்றதாக புகார் எழுந்தது.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜிகோப்பு புகைப்படம்

இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது திமுக அரசில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, கைது நடவடிக்கையை தொடர்ந்து இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்ந்து வந்தார். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், 3 முறை ஜாமீன் கோரியும் நீதிமன்றம் அவரது மனுவை நிராகரித்தது. தொடர்ந்து அவர் மீதான நீதிமன்ற காவலும் நீடித்துவந்தது.

இந்த சூழலில், சிறையில் உள்ள செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இதுதொடர்பான தமிழக முதலமைச்சருக்கு தனது ராஜினாமா கடித்தத்தை அவர் அனுப்பி இருந்தார். முதல்வருக்கு செந்தில் பாலாஜி எழுதியுள்ள கடிதத்தில், “தனிப்பட்ட காரணங்களால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவிpt web

இந்நிலையில் செந்தில் பாலாஜியின் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஏற்றுக்கொண்டுள்ளார். முதலமைச்சரின் பரிந்துரை மனு, உள்துறை மூலமாக ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நிலையில் ஆளுநர் தற்போது அதை ஏற்றுக்கொண்டுள்ளார்.

நாளை மறுதினம் (15/02/2024) செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அமைச்சராக இருப்பவர் வெளியில் வந்தால் தனது அதிகாரத்தை பயன்படுத்தி சாட்சிகளை கலைப்பார் என்று அமலாக்கத்துறை தொடர்ந்து நீதிமன்றங்களில் வலியுறுத்தி வந்தது. இந்நிலையில் தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். ஆகவே அதனை ஒட்டி ஜாமீன் மனு மீதான விசாரணையில் தனது வாதங்களை செந்தில்பாலாஜி தரப்பினர் முன்வைப்பர் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com