\
Gold Smuggling at Chennai Airport
தங்கக் கடத்தல்Chat Gpt

சினிமா பாணியில் கடத்தல்.. ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது.. சென்னை விமான நிலைத்தில் நடந்தது என்ன?

சென்னை விமான நிலைய சுங்கத்துறையில், சினிமா காட்சிகளையும் முறியடிக்கும் விதத்தில், பரபரப்பான விதத்தில் நடந்த தங்கக் கடத்தல்.
Published on

செய்தியாளர் : தமிழ் அரசன்

சென்னை விமான சர்வதேச விமான நிலையத்தில், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள், ரகசியமாக கடத்தி வரும் தங்கத்தை, சுங்கச் சோதனையில் சிக்காமல் வெளியே எடுத்து செல்வதற்கு, விமான நிலையத்தில் பணியில் உள்ள சுங்கத்துறை சி குரூப் ஊழியர்களான ஹவில்தாரர்கள் சிலர் உடந்தையாக இருப்பதாக, சென்னை தி நகரில் உள்ள, மத்திய வருவாய் புலனாய்வுத் துறை எனப்படும் டி.ஆர்.ஐ -க்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வுத்துறை தனிப்படையினர், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தனர். தொடர்ந்து, இரவு மற்றும் அதிகாலை நேரங்களில், வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளை, தீவிர கண்காணித்துக் கொண்டு இருந்தனர். இந்தக் கண்காணிப்புகள், தொடர்ந்து சில நாட்கள் நடந்து வந்தன.

Srilankan Airlines
Srilankan AirlinesReuters

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, துபாயில் இருந்து இலங்கை வழியாக ஸ்ரீலங்கன் ஏர் லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த 2 இலங்கை பயணிகள், தங்களிடம் சுங்க தீர்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறிவிட்டு விமான நிலையத்தை விட்டு வெளியில் செல்ல முயன்றனர். ஆனால், அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில், அவர்களை நிறுத்தி உடமைகளை பரிசோதித்த ஊழியர்கள், மேலதிக பரிசோதனைக்காக கார்த்திக் மற்றும் அருண் என்ற இரண்டு சுங்கத்துறை ஹவில்தார்களிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, இந்த 2 பயணிகளையும் அழைத்து சென்று, எக்ஸ்ரே டிபார்ட்மெண்டில், இருவரையும் முழுமையாக எக்ஸ்ரே எடுத்து கொண்டு வாருங்கள் என்று கூறியுள்ளனர்.

இதையடுத்து ஹவில்தாரர்கள் இருவரும், இலங்கை பயணிகள் இருவரையும், விமான நிலைய எக்ஸ்ரே டிபார்ட்மெண்டுக்கு அழைத்து சென்றனர். ஆனால், அவர்களுக்குப் புதிய எக்ஸ்-ரே பரிசோதனை செய்வதற்குப் பதிலாக, அவ்விருவரின் உடல்களிலும் எந்தச் சந்தேகத்திற்கிடமான பொருளும் கண்டறியப்படவில்லை என்பதைக் காட்டும், முன்னரே தயாரிக்கப்பட்ட இரண்டு எக்ஸ்-ரே முடிவுகளின் நகல்களுடன் ஹவில்தார்கள் திரும்பினர். அவர்கள் அந்த அறிக்கைகளைச் சுங்க அதிகாரிகளிடம் சமர்ப்பித்து, பயணிகள் கடத்தல் தங்கத்தைக் கொண்டு செல்லவில்லை என்று கூறினர்.

கடத்தப்பட்ட தங்கம்
கடத்தப்பட்ட தங்கம்Pt web

இதை தூரத்தில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த டி ஆர் ஐ தனிப்படை அதிகாரிகள், உடனடியாக அங்கு வந்து, அந்த இரண்டு பயணிகள் மற்றும், 2 ஹவில்தாரர்கள் ஆகியோரை அழைத்துக் கொண்டு, எக்ஸ்ரே அறைக்கு சென்றனர். அங்கிருந்த எக்ஸ்ரே ஊழியர்களை தவிர்த்து விட்டு, டி.ஆர்.ஐ அதிகாரிகளே, பயணிகளுக்கு எக்ஸ்ரே எடுத்தனர். அந்த எக்ஸ்ரே ரிப்போர்ட்டில், இரண்டு பயணிகளின் உடலில் ஆசன வாய்க்குள், தங்கக் கட்டிகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அதிரடியாக செயல்பட்ட டி.ஆர்.ஐ அதிகாரிகள், இலங்கையைச் சேர்ந்த தங்கம் கடத்தல் பயணிகள் 2 பேர், சுங்கத்துறை ஹவில்தாரர் 2 பேர், எக்ஸ்ரே டிபார்ட்மெண்ட் ஊழியர்கள் 2 பேர், ஆகிய 6 பேரை, கைது செய்தனர். அதோடு பயணிகள் இரண்டு பேரின் ஆசன வாய்க்குள் இருந்த தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். இரண்டு பயணிகளிடம் இருந்து 2.6 கிலோ கொண்ட 24 கேரட் சுத்தமான தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்துள்ளனர். அந்த தங்க கட்டிகளின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.4 கோடி. அதன் பின்பு 6 பேரையும், டி ஆர் ஐ அதிகாரிகள் சென்னை தியாகராய நகரில் உள்ள, டி ஆர் ஐ அலுவலகத்துக்கு கொண்டு சென்று பல மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.

கைது
கைதுகோப்புபடம்

அதன் பின்பு 6 பேரையும், சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தின் ஆஜர் படுத்தி, புழல் சிறையில் அடைத்துள்ளனர். அதோடு டிஆர்ஐ அதிகாரிகள், இவர்கள் ஆறு பேரையும் மீண்டும் சில தினங்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த இருப்பதாகவும், அப்போது இந்த கடத்தலில், வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? இவர்கள் இதை போல் எவ்வளவு காலமாக இந்த தங்கம் கடத்தலை செய்து வருகின்றனர்? இதன் பின்னணியில் யார் யார் உள்ளனர்? என்று தீவிர விசாரணை மேற்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த விசாரணைக்கு பின்பு சுங்கத்துறை சம்பந்தப்பட்ட மேலும் சிலரும் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. சுங்கத்துறை உதவியுடன் சென்னை விமான நிலையத்தில் நடந்த, இந்த தங்கம் கடத்தல் சம்பவம், சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Gold Smuggling at Chennai Airport
விண்வெளிக்கு ’சுற்றுலா பேக்கேஜ்’ சீனா நிறுவனத்தின் அதிரடி பிளான்.. ஆனால், இத்தனை கோடியா?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com