பிரதமர் வேட்பாளர் யார்? எரியும் தீயில் எண்ணெய் ஊற்றிய வெங்கட் பிரபு.. சர்ச்சையை கிளப்பிய வீடியோ!
முதல்வர் விஜய் நடித்து கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி வெளியான திரைப்படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ எனப்படும் ‘GOAT’. இத்திரைப்படம் வெளியாகி இன்றுடன் 2 ஆண்டுகள நிறைவு செய்துள்ள நிலையில், அப்படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 54 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில், GOAT திரைப்படத்தின் வீடியோ காட்சிகளுடன், தவெக தலைவர் விஜயின் அரசியல் பயணம் முதல் அவர் முதல்வரானது வரையிலான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. எனினும், இந்த வீடியோவின் ஒரு இடத்தில் நாடாளுமன்ற காட்சிகள் இடம்பெற்றிருப்பது தான், அடுத்த பிரதமர் யார்? என்ற சர்ச்சைக்கு மத்தியில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களை கைப்பற்றியது. எனினும், ஆட்சியமைக்க போதிய இடங்கள் கிடைக்காத நிலையில், காங்கிரஸ், விசிக, IUML, இடதுசாரி கட்சிகளின் ஆதரவோடு தவெக ஆட்சி அமைத்திருக்கிறது. முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து விஜயை முன்னிறுத்தி இந்தியாவின் வெவ்வேறு மொழிகளில் செய்திகள் மற்றும் ரீல்ஸ்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. அதோடு விஜய் பிரதமரானால் நாடு முன்னேறும் என்றும் வட மாநிலங்களில் தீவிர பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், தவெகவைச் சார்ந்த அமைச்சர்களும், எம்.எல்.ஏ-க்களும் அடுத்த பிரதமராக விஜய் ஆவார் என வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்
எனினும், தவெக அமைச்சர்களின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காவிட்டால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வோம் என வெளிப்படையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்தச்சூழலில் தான், பிரதமர் வேட்பாளர் விஜயா? ராகுல் காந்தியா? என்பது பேசுபொருளாகி வருகிறது. இந்தச்சூழலில் தான், இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ள வீடியோவில் நாடாளுமன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது.
ஏற்கனவே, தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே வெளியான ‘GOAT’ திரைப்படத்தில், விஜய் 2026-ஆம் ஆண்டு முதல்வராக வருவார் என்பதை உணர்த்தும் வகையில், விஜய் பயன்படுத்திய காரில் ‘TN07 CM 2026’ என்ற நம்பர் பிளேட்டை இயக்குநர் வெங்கட் பிரபு பயன்படுத்தியிருந்தார். தற்போது, தமிழ்நாட்டின் முதல்வராகவும் விஜய் தேர்ந்தெடுப்பட்டுள்ளார். இந்தச்சூழலில் தான், 2029 மக்களவைத் தேர்தலில் அடுத்த பிரதமர் வேட்பாளர் யார்? என்ற விவகாரம் பேசுபொருளாகியிருக்கும் நிலையில், 'GOAT' திரைப்படத்தின் 2-ம் ஆண்டு நிறைவையொட்டி வெங்கட் பிரபு வெளியிட்டுள்ள வீடியோவில் நாடாளுமன்றக் காட்சிகள் இடம்பெற்றுள்ளது ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

