போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட ஞானசேகரனுக்கு திடீரென வலிப்பு - ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை
செய்தியாளர்: ஜெ.அன்பரசன்
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் கடந்த டிசம்பர் மாதம் 25ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அப்போது அவர், தவறி விழுந்து அவரது கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், இவ்வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை உயர் நீதிமன்றம் அமைத்தது. சிறப்பு புலனாய்வுக் குழு ஞானசேகரனின் வீட்டை சோதனை செய்து லேப்டாப், செல்போன் உள்ளிட்ட பல டிஜிட்டல் ஆவணங்களை பறிமுதல் செய்து சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பினர்.
இதையடுத்து ஞானசேகரனை 7 நாட்கள் போலீஸ் காவல் கேட்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் மனுத் தாக்கல் செய்த நிலையில் ஏழு நாட்கள் போலீஸ் காவல் வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் கடந்த 20 ஆம் தேதி உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு திடீரென ஞானசேகரனுக்கு வலிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அதிகாலை 3 மணியளவில் ஞானசேகரனை ஸ்டான்லி மருத்துவமனையில் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு போலீசார் பாதுகாப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.