அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை
அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைpt desk

சென்னை | அமலாக்கத்துறை அலுவலகத்தில் எம்பி கதிர் ஆனந்த் ஆஜர்.. அதிகாரிகள் தீவிர விசாரணை!

திமுக எம்.பி கதிர் ஆனந்த் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான நிலையில், அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published on

செய்தியாளர்: ஜெ.அன்பரசன்

திமுக எம்.பி கதிர் ஆனந்த்-க்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை:

அமைச்சர் துரைமுருகனின் மகனும், எம்.பி-யுமான கதிர் ஆனந்த்-க்குச் சொந்தமான இடங்களில் கடந்த 3 ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் மூன்று நாட்கள் தொடர் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தனர். காட்பாடியில் உள்ள எம்.பி கதிர் ஆனந்தின் வீடு, கிரிஸ்டியான்பேட்டை பகுதியில் உள்ள கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி, திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் என்பவருக்குச் சொந்தமான இடம் உள்ளிட்ட 8 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டனர்.

எம்பி கதிர் ஆனந்த்
எம்பி கதிர் ஆனந்த்pt desk

கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் ரூ.13.7 கோடி பணம் பறிமுதல்

இந்த சோதனையில் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் இருந்து ரூ.13.7 கோடி பணம் மற்றும் வீட்டில் லாக்கர் உடைக்கப்பட்டு அதிலிருந்து ரூ.75 லட்சம் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கல்லூரியில் இருந்து ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட ஆவணங்கள், வீட்டிலிருந்து பல்வேறு சொத்து ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் எம்.பி கதிர் ஆனந்த் தொடர்புடைய சொத்துக்கள் குறித்த விவரங்களை அதிகாரிகள் திரட்டி வருவதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை
“இருட்டில் அமர்ந்துகொண்டு அமாவாசையை எண்ணிக் கொண்டிருக்கிறார் இபிஎஸ்” - சாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன்:

இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் 50-க்கும் மேற்பட்ட சொத்து ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக திமுக எம்பி கதிர் ஆனந்துக்கு இ-மெயில் மூலம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். இந்த சம்மனைத் தொடர்ந்து எம்.பி கதிர் ஆனந்த் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சம்மனை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கூறியதோடு, சம்மனை ரத்து செய்ய இயலாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

அமலாக்கத்துறை அலுவலகத்தில் எம்பி கதிர் ஆனந்த் ஆஜர்
அமலாக்கத்துறை அலுவலகத்தில் எம்பி கதிர் ஆனந்த் ஆஜர்pt desk

அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான திமுக எம்.பி கதிர் ஆனந்த்:

இதையடுத்து திமுக எம்.பி கதிர் ஆனந்த் இன்று காலை 10:30 மணியளவில் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அமலாக்கத்துறை - புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். சாலையில் வாகனத்தை நிறுத்திவிட்டு சில நிமிடங்கள் காத்திருந்த பின் அமலாக்கத்துறை அலுவலகத்தில் காரை நிறுத்திவிட்டு நிதானமாக நடந்து சென்றார்.

அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை
பெண்கள் பாதுகாப்பு: தமிழகத்தை புகழ்ந்த ஆளுநர் ஆர்.என்.ரவி!

விசாரணைக்குப் பின்பே முழு விபரமும் தெரியவரும் - அமலாக்கத்துறை அதிகாரிகள் தகவல்

அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான திமுக எம்.பி கதிர் ஆனந்திடம் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 14 கோடி பணம் குறித்தும், கைப்பற்றப்பட்ட 50-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் குறித்தும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முழுமையான விசாரணைக்கு பிறகே ஆவணங்கள் குறித்தும், பறிமுதல் செய்யப்பட்ட பணம் எப்படி வந்தது? என்பது குறித்தும் முழுமையான தகவல்கள் தெரியவரும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com