’அவன் இல்லாம என்னால வாழ முடியாது..’ - காதலன் இறந்த அதே தேதியில் உயிரைவிட்ட காதலி! | Kanniyakumari
செய்தியாளர் - சுமன்
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ளது கணேசபுரம். இப்பகுதியை சேர்ந்த 23 வயதான இளம்பெண் வித்யா ஜூலை 5ம் தேதி காலை வழக்கம்போல வீட்டில் சமையல் வேலைகளை முடித்துள்ளார். பின்னர் கழிவறைக்கு சென்றவர் வெகுநேரமாகியும் கழிவறையை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த உறவினர் கதவைத் தட்டிப்பார்த்துள்ளார். ஆனால் எந்த சத்தமும் இல்லாமல் இருக்கவே கதவைத் திறந்து உள்ளே பார்த்த போது அவர் கழிப்பறை உத்திரத்தில் துப்பட்டாவால் தூக்கிட்ட நிலையில் கிடந்துள்ளார்.
உடனடியாக வித்யாவை மீட்ட உறவினர் அருகில் உள்ள குளச்சல் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் பல அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளன.
காதலுக்காக உயிரைவிட்ட காதலி!
உயிரிழந்த வித்யாவிற்கு மூன்று சகோதரிகளும் ஒரு சகோதரனும் இருந்த நிலையில், சகோதரிகள் மூவரும் வீட்டை விட்டுச் சென்று திருமணம் செய்துகொண்டனர். இதனால் வித்யா, தாயார் புஷ்பா மற்றும் சகோதரனுடன் வசித்து வந்துள்ளார். திடீரென 3 மாதத்திற்கு முன் ஏற்பட்ட விபத்தின் காரணமாக தாயார் புஷ்பா படுத்த படுக்கையாகிவிட்டதால் குடும்பப் பொறுப்பு 12-ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு தாய்க்கு ஒத்தாசையாக இருந்த வித்யாவின் தோளில் விழுந்துள்ளது. இதனால் தென்னை நார் கம்பெனிக்கு வேலைக்குச் சென்ற வித்யா, படுத்த படுக்கையாகிவிட்ட தாயையும் மனநலம் பாதிக்கப்பட்ட தம்பியையும் கவனித்து வந்துள்ளார்.
அப்போது கம்பெனியில் பணியாற்றிய கருங்கல் பகுதியை சேர்ந்த அருண் என்ற இளைஞரை வித்யா காதலிக்கத் தொடங்கியுள்ளார். காதல் விவகாரம் புஷ்பாவிற்குத் தெரிந்தவுடன் மற்ற மகள்களைப்போல் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்றும், இரு வீட்டார் சம்மதித்தால் மட்டுமே திருமணம் செய்துகொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார். ஆனால் பெற்றோரை இழந்த காதலன் அருணின் உறவினர்கள் இவர்களின் காதலை ஏற்க மறுத்துள்ளனர். திருமணம் சம்பந்தமாக தொடர் பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் கடந்த மாதம் 5-ம் தேதி காதலன் அருண், தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அப்போதில் இருந்தே துக்கத்தில் இருந்த வித்யா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். இந்நிலையில்தான் காதலன் இறந்த அதே நாளில் வித்யாவும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக அவரது தாயார் கூறியுள்ளார்.
வித்யாவின் இறப்புக்கு காதலனின் மரணம்தான் காரணமா வேறு ஏதேனும் காரணமா என தொடர் விசாரணை நடந்துவருகிறது.
காதலனின் பிரிவு தாங்காமல் அவர் தற்கொலை செய்துகொண்ட அதே பாணியில் அதே நாளில் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.