அரியலூர்|சினிமா பாணியில் காதலியை தூக்கிச் சென்ற காதலன்.. நடந்தது என்ன?
கருங்கல் கொட்டப்பட்ட சாலையில் கதவை கூட மூடாமல் மின்னல் வேகத்தில் பறந்து சென்றது காதலன் ஓட்டி வந்த கார்.. இன்ஸ்டாகிராம் காதலனுடன் தப்பிச் சென்றிருக்கிறார் இளம்பெண் ஒருவர். அரியலூரைச் சேர்ந்த அந்த பெண், சென்னையில் செவிலியராக பணிபுரிகிறார். சிங்கப்பூரில் பணிபுரியும் புதுக்கோட்டை மாங்குடியைச் சேர்ந்த குமரேசன் என்பவருக்கும் இந்த இளம் பெண்ணுக்கும் இன்ஸ்டாவில் பழக்கம் ஏற்பட்டு பின் காதலாக மலர்ந்திருக்கிறது. இருவரும் திருச்சியில் தனியார் விடுதியில் சில நாட்கள் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இது பெற்றோர்களுக்கு தெரிய வந்திருக்கிறது. இருவீட்டாரும் இவர்களின் காதலை ஏற்றுக்கொள்ளாத நிலையில், அந்த பெண்ணிடம் இருந்த மொபைல் போனை வாங்கிக்கொண்டு, சின்னபட்டாக்காடு கிராமத்தில் உள்ள சகோதரி வீட்டில் தங்க வைத்திருக்கின்றனர். இந்த தகவலை பெண், ரகசியமாக அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு குமரேசனிடம் கூறியிருக்கிறார்.
உடனே மறுநாளே காரில் நண்பர்களுடன் வந்த குமரேசன், திருமண அழைப்பிதழ் கொடுக்கவந்தது போல நடித்து வீட்டினுள் சென்றிருக்கின்றனர். அந்த பெண்ணின் சகோதரியை அவர்கள் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டியதாக தெரிகிறது. அப்போது, அதை சகோதரிதடுக்க முற்பட்டபோது அவரின் குழந்தையின் காதில் கத்திபட்டு ரத்தம் கொட்டியிருக்கிறது.
குழந்தையின்அலறல் ஒருபுறம், சகோதரியின் கூச்சல் மறுபுறமும் கேட்கவே அருகிலிருந்தவர்களும் ஓடி வந்திருக்கின்றனர். எதையும் பொருட்படுத்தாத அந்த இளம் பெண்,காதலனுடன் மின்னல் வேகத்தில் காரில் பறந்து சென்றிருக்கிறார்.