செஞ்சி | அரசு பேருந்து மோதி துக்க நிகழ்வுக்குச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு
செய்தியாளர்: தமிழரசன்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ராஜாம்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைக்கண்ணு (50). இவர் தனது மனைவி பச்சையம்மாள் (45), மகன் குணசேகரன் (22), மகள் கோபிகா (18), ஆகியோருடன் சென்னை மதுரவாயலில் வசித்து வருகிறார். இந்நிலையில், துரைக்கண்ணுவின் அண்ணன் நந்தகோபால் என்பவர் கடந்த இருபது நாட்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு உயிரிழந்தார்.
இதையடுத்து துரைக்கண்ணு அவருடைய மனைவி பச்சையம்மாள் மற்றும் மகள் கோபிகா ஆகிய மூவரும் சென்னையில் இருந்து இருசக்கர வாகனத்தில் ராஜாபுலியூர் கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது செஞ்சி அருகே வல்லம் என்ற பகுதியில் வந்தபோது, அரசு பேருந்து துரைக்கண்ணு குடும்பத்தினர் வந்த இருசக்கர வாகனத்தில் மீது மோதியுள்ளது. இதில், மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற செஞ்சி காவல் துறையினர், மூவரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.