ஜெம் வீரமணி மீதான போக்ஸோ வழக்கு.. சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ.. சூடுபிடிக்கும் விசாரணை!
பிரபல தொழிலதிபர் ஜெம் வீரமணி மீதான சிறுமிகளின் பாலியல் புகார் தமிழ்நாட்டையே அதிரவைத்துள்ளது. இந்த விவகாரத்தில் திமுக மற்றும் தவெக ஆகிய கட்சிகள் மாறிமாறி விமர்சித்து வருகின்றன. இந்த வழக்கில் 11 மாதங்களாக நடவடிக்கை எடுக்காமல் வழக்கை முடிக்க முயன்றது ஏன் என்பது குறித்து விசாரிக்க காவல்துறை ஆணையர் காவல்துறை உள்விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக இந்த வழக்கை ஆரம்பகட்டத்தில் விசாரித்த காவல் அதிகாரிகளில் ஒருவரான கோயம்பேடு சரக உதவி காவல் ஆணையர் யாஸ்மின் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும், இதே வழக்கு தொடர்பாக அப்போது சென்னை மாநகர காவல் ஆணையராக பணியாற்றிய அருண் ஐ.பி.எஸ். மற்றும் கூடுதல் காவல் ஆணையராக இருந்த கண்ணன் ஐ.பி.எஸ். ஆகியோரும் தற்போது காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஜெம் வீரமணி தொடர்பான போக்சோ வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்து டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். இந்த சிறப்புக் குழுவில், கூடுதல் காவல் ஆணையர் தேன்மொழி, இணை காவல் ஆணையர் திஷா மிட்டல், காவல் கண்காணிப்பாளர்கள் முத்தரசி, கீதாஞ்சலி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதனிடையே ஜெம் வீரமணி மீதான வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிறுமிகளின் வீடியோக்கள் பொதுவெளியில் வெளியாகியுள்ளதால், விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். இதனால் இந்த வழக்கு நாளுக்கு நாள் பரபரப்பாக மாறி வருகிறது.

