மீத்தேன் திட்டத்துக்கு முடிவு! காவிரி டெல்டாவில் விவசாயிகளுக்குக் கிடைத்த வெற்றி!
செய்தியாளர் : துர்கா தேவி சரவணன்
திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டப் பகுதிகளை உள்ளடக்கிய மன்னார்குடி நிலக்கரி படுகை மீத்தேன் திட்டத்திலிருந்து, 'கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட்' (ஜி.இ.இ.சி.எல்.) நிறுவனம் முழுமையாக வெளியேறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம், காவிரி டெல்டா மக்களின் நீண்டகாலப் போராட்டத்திற்கு முழுமையான வெற்றி கிடைத்துள்ளது.
2010-ம் ஆண்டின் தொடக்கத்தில், மத்திய அரசும் ஜி.இ.இ.சி.எல். நிறுவனமும் இணைந்து இத்திட்டத்தைத் தொடங்க முயன்றன. 600 முதல் 1,500 அடி ஆழத்தில் உள்ள நிலக்கரி அடுக்குகளிலிருந்து மீத்தேன் வாயுவை எடுப்பதே இத்திட்டத்தின் நோக்கமாக இருந்தது. இத்திட்டத்தால் நிலத்தடி நீர்மட்டம் குறையும், விவசாயம் பாதிக்கப்படும், சுற்றுச்சூழல் சீர்கெடும் என்ற அச்சம் மக்களிடையே எழுந்தது. இதனால் 2012-ல் பொதுமக்கள் மற்றும் விவசாய சங்கங்கள் சார்பில் கடுமையான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.
பொதுமக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து, 2013-ல் அப்போதைய முதல்வர் ஜெ.ஜெயலலிதா இத்திட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்தார். மேலும், திட்டத்தை ஆராய்வதற்காக வல்லுநர் குழுவையும் அமைத்தார். அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், 2015-ல் தமிழக அரசு இத்திட்டத்திற்கு நிரந்தரத் தடை விதித்தது.
திட்டத்தைச் செயல்படுத்த முடியாததால் ஏற்பட்ட இழப்புகளுக்காக, மத்திய அரசிடம் ரூ.1,735 கோடி இழப்பீடு கேட்டு ஜி.இ.இ.சி.எல். நிறுவனம் நீதிமன்ற மத்தியஸ்த நடவடிக்கையைத் தொடங்கியது. அதே நேரத்தில், மத்திய அரசும் அந்நிறுவனத்திடம் 30 மில்லியன் அமெரிக்க டாலர் கோரி எதிர்வழக்கு தொடர்ந்தது.
நடுவர் மன்றத்தின் தீர்ப்பு
இந்த வழக்கில் நடுவர் மன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. மத்திய அரசு தொடர்ந்த எதிர்வழக்கு நிராகரிக்கப்பட்டது. ஜி.இ.இ.சி.எல். நிறுவனம் உண்மையாகச் செலவு செய்த தொகைக்காக, வெறும் ரூ.5 கோடி மட்டுமே வழங்க உத்தரவிடப்பட்டது.
நடுவர் மன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, மன்னார்குடி மீத்தேன் திட்டப் பகுதியில் தங்களுக்கு இனி எந்தவிதப் பங்கும் இல்லை என்றும், இத்திட்டத்திலிருந்து முழுமையாக விலகுவதாகவும் ஜி.இ.இ.சி.எல். நிறுவனம் அறிவித்துள்ளது.
காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக நிலைநிறுத்தவும், சுற்றுச்சூழலையும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கவும் இத்தீர்ப்பு ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

