”சென்னையில் உள்ள விடுதிகளில் இனி டீ, காபி கிடையாது” - விடுதி உரிமையாளர்கள் சங்கம்!
அமெரிக்கா - ஈரான் போரால் தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டருக்குத் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. சென்னை மணலியில் உள்ள ஐ.ஓ.சி. சிலிண்டர் நிரப்பும் நிறுவனத்தில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாடு எரிவாயு சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிறுவனத்தில் இருந்து வணிக பயன்பாடு எரிவாயு சிலிண்டர்கள் ஏற்றுவதற்காக சென்ற லாரிகள், சிலிண்டர் ஏற்றப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் ஒரு முகவருக்கு தினமும் 4 லாரிகள் ஏற்றப்படும் நிலையில், தற்போது ஒன்று அல்லது இரண்டு லாரிகள் மட்டுமே ஏற்றப்படுவதாக லாரி ஓட்டுநர்கள் கூறுகின்றனர். மறுபுறம், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலியால், பெங்களூருவில் உள்ள உணவகங்கள் இன்று முதல் மூடப்படும் என்று பெங்களூரு உணவகங்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதேபோல, தமிழ்நாட்டிலும் உணவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த சூழலில் தான், தமிழ்நாடு விடுதி உரிமையாளர் நலச்சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக விடுதிகளில் டீ, காபி, தோசை, சப்பாத்தி உள்ளிட்டவை வழங்கப்படாது எனத் தெரிவித்திருக்கிறது. அதேபோல, சாம்பார் மற்றும் குருமாவுக்கு பதில் சட்னி வழங்கப்படும் எனவும் கலவை சாதங்கள், முட்டை போன்ற குறைவான எரிபொருளை பயன்படுத்தி செய்யக்கூடிய உணவுகள் மட்டுமே கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், எரிபொருள் தட்டுப்பாடு தொடரும் வரை இந்த நடைமுறை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

