முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லி விசிட் - என்ன நடக்கிறது அதிமுகவில்?
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதனால் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சிகளை செங்கோட்டையன் தொடர்ந்து தவிர்த்து வந்தார். இந்தசூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி,மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு உள்ளிட்ட மக்கள் பிரச்னைகள் குறித்து அமித் ஷாவிடம் எடுத்துரைத்ததாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து, அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திடீரென டெல்லி சென்றது பேசுபொருளாகியுள்ளது.
டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, செங்கோட்டையன் சந்தித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில், செங்கோட்டையன் டெல்லி சென்றது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
முன்னதாக, அதிமுக உடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும், சரியான நேரம் வரும்போது அதுபற்றி அறிவிக்கப்படும் எனவும் ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்திருந்த பேட்டியில் அமித் ஷாகுறிப்பிட்டிருந்தார்.