அடுத்த முதல்வர் யார்? சி-ஓட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்! விஜய்-க்கு இவ்ளோ வாய்ப்பா?
அடுத்த ஆண்டு தமிழ்நாட்டிற்கான சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. ஆளும் திமுக ஆட்சியை தக்க வைக்கவும், ஆண்ட அதிமுக ஆட்சியை மீண்டும் பிடிக்கவும் முயற்சி செய்து வருகிறது. அதேபோல், பாஜக, நாம் தமிழர் போன்ற கட்சிகள் தங்களுடைய வாக்கு சதவீதத்தை உயர்த்திக் கொள்ளவும் ஆட்சியை பிடிப்பதற்கு பாய்ச்சலில் அடுத்தக்கட்டத்தை எட்டவும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த வரிசையில் புதிதாக இணைந்து இருக்கிறது தமிழக வெற்றிக் கழகம். விஜய் கட்சி தொடங்கியது முதலே அவர் தமிழக அரசியல் களத்தில் முக்கிய அங்கம் வகித்து வருகிறார். அதனால், 2026 தேர்தலில் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, விஜய், சீமான், அண்ணாமலை என 5 முதல்வர் வேட்பாளர்கள் இருக்க வாய்ப்புள்ளது. இதில் கூட்டணி அமைவதை பொறுத்து குறையும்.
நாட்டின் முன்னணி கருத்தாய்வு நிறுவனங்களில் ஒன்றான சி-வோட்டர் நடத்திய ஆய்வில், 27 சதவீதம் பேர் மு.க.ஸ்டாலினை முதல்வர் பதவிக்கு விரும்பத்தக்க நபராக தேர்வு செய்துள்ளனர்.
இந்த பட்டியலில் 18 சதவீதம் பேரின் ஆதரவைப் பெற்று தவெக தலைவர் விஜய் இரண்டாவது இடம் பிடித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி 10 சதவீத ஆதரவுடன் மூன்றாவது இடத்திலும், அண்ணாமலை 9 சதவீத ஆதரவுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.
விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளோரின் எண்ணிக்கை எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை இருவருக்கும் ஆதரவு தெரிவித்துள்ளோரின் எண்ணிக்கை போன்று கிட்டதட்ட இரு மடங்காக இருப்பது கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.
மேலும், 36 சதவீதம் பேர் தமிழக அரசின் செயல்பாடுகள் மீது ஓரளவு திருப்தி அடைவதாக தெரிவித்தனர். 25 சதவீதம் பேர் திருப்தி அடையவில்லை என தெரிவித்துள்ளனர். இதேபோல் முதல்வரின் தனிப்பட்ட செயல்பாடுகளில் 33 சதவீதம் பேர் ஓரளவு திருப்தி அடைவதாக தெரிவித்துள்ளனர். இபிஎஸ்ஸின் செயல்பாடுகளில் 8 சதவீதம் பேர் திருப்தியடைந்ததாக பதிலளித்துள்ளனர். 15 சதவீதம் பேர் திமுக ஆட்சியில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து கவலை தெரிவித்துள்ளனர். விலைவாசி உயர்வு குறித்து 12 சதவீதம் பேரும், போதைப் பொருள் பயன்பாடு குறித்து 10 சதவீதம் பேரும் கவலை தெரிவித்துள்ளனர்.