திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு. க. செல்வம் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் கடந்த 1997 இல் அதிமுகவிலிருந்து பிரிந்து திமுகவில் இணைந்தார்.
பின்னர் கடந்த 2020ஆம் ஆண்டு துவக்கத்தில் பா.ஜ கவின் அகில இந்தியத் தலைவர்களை டில்லியில் சந்தித்து பேசினார். அப்போது திமுக கட்சியின் தலைமை விளக்கம் கேட்டு அவரை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கியது. இதனையடுத்து கடந்த 2022 நவம்பர் மீண்டும் தன்னை திமுகவில் இணைந்து கொண்டு தி.மு.க தலைமை நிலைய செயலாளராக பணியாற்றி வந்தார்.
இந்தநிலையில் திமுக தலைமை நிலைய செயலாளரான கு.க செல்வம் உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவருக்குப் பலவேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.