அதிகாரம் அல்ல, மக்கள் தொண்டே முக்கியம்.. தேசிய அரசியலில் ’காமராஜர் திட்டம்’ - இன்றும் அவசியமே!
அரசியலின் மிகப்பெரிய சிக்கலாக இருப்பது
மனிதர் கண்டுபிடித்த பல்வேறு அற்புதங்களைப் போலத்தான் அரசியல் என்பது. காட்டுமிராண்டி மனிதனாக இருந்த அவன் என்று கூடி வாழ தளைப்பட்டானோ அன்றே சமூக உணர்வு பெற்றான். அதன் தொடர்ச்சியாகத்தான் தன்னைத் தானே நெறிப்படுத்தி எதிர்காலத்தை நோக்கி அழைத்துச் செல்ல அரசியல் என்ற நாகரீகத்தை கண்டுபிடித்தான். மனிதர்கள் எப்படி கூடி வாழ வேண்டும் என்பதை அரசியல் சிந்தனைகள் மூலம் ஒவ்வொரு காலத்திலும் மேம்படுத்திக் கொண்டே வந்தார்கள். அப்படி கண்டுபிடிக்கப்பட்ட நவீன கால அரசியல் சிந்தனைகள் தான் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம். இப்படி அரசியல் ஒரு புறம் மனிதர்களை நெறிப்படுத்திக் கொண்டிருக்க மற்றொரு புறம் அதே அரசியல் தான் சுயநல சிந்தனை உடையோரின் கூடாரமாக மாறியிருக்கிறது. சுயநல பித்து, அதிகார போதை அரசியல் கட்சியில் உள்ளவர்களை ஆட்டிப் படைக்கிறது.
இத்தகைய சூழலில் தான், அரசியலில் மக்கள் தொண்டுதான் முக்கியம், அதற்கு நேர்மையான அரசியலே பிரதானம் என்று தன் வாழ்நாள் முழுவதும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்த கர்ம வீரர் காமராஜரின் பிறந்தநாளை இன்று நாம் கொண்டாடுகின்றோம். காமராஜரின் பிறந்தநாளில் அவரிடம் இருந்து பேச நமக்கு எவ்வளவோ இருக்கிறது. சுதந்திர போராட்ட காலத்தில் அவர் செய்த அளப்பரிய தியாகம். முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து 10 ஆண்டுகள் செய்த ஆட்சி, பின்னர் தேசிய அரசியலில் அவர் கிங் மேக்கர் ஆக உயர்ந்தது என பல விஷயங்களை பேசலாம். காமராஜரின் வாழ்க்கையில் எத்தனையோ திட்டங்களை முதலமைச்சராக கொண்டு வந்திருந்த போதும், தேசிய அரசியலில் அவர் முன்வைத்த திட்டம் இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்கும் தேவையான ஒன்றாக இருக்கும். காமராஜ் திட்டம் என்று அழைக்கப்படும் அந்த திட்டம் குறித்தும் அது தற்காலத்திற்கு எவ்வளாவு தேவையாக இருக்கிறது என்பது குறித்தும் விரிவாக பார்க்கலாம்.
தொண்டர் முதல் எதிர்க்கட்சி பணி வரை! எளிய அறிமுகம்
1903 ஆம் ஆண்டு எளிய வணிக பின்னணி கொண்ட குடும்பத்தின் பிறந்த காமராஜர், குடும்ப சூழ்நிலை காரணமாக சிறுவயதிலேயே பள்ளிக்கல்வியை விட்டுவிட்டார். காந்தியால் ஈர்க்கப்படுவதற்கு முன்பே ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் அவரை பெரிதும் பாதித்திருந்தது. அதுதான் சுதந்திர போராட்டக் களத்திற்கு அவரை கொண்டு வந்தது. காமராஜர் 1920-இல் 17 வயதில் முழுநேர காங்கிரஸ் தொண்டராக மாறி, இளம் வயதிலேயே சுதந்திர போராட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு செய்யும் வேலை செய்தார். ஒரு சிறந்த காந்தியவாதியாகவே அவர் அரசியல் வாழ்க்கையை தொடங்கினார் இறுதிவரை அப்படியே இருந்தார்.
காங்கிரஸ் தொண்டராக பயணித்த அவர், இந்திய அரசியலில் முதன்முறையாக 1937 ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு வந்தபோது, காமராஜர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் பலமுறை விருதுநகர் தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 13 ஏப்ரல் 1954 முதல் 2 அக்டோபர் 1963 வரை காமராஜர் மூன்று முறை மொத்த 9 ஆண்டுகள் முதலமைச்சராக பதவி வகித்தார். நேருவின் விருப்பப்படி, காமராஜர் 1963-இல் கட்சி தலைவராக ஆனார். விருதுநகர் தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சி பிளவுபட்ட பின்னர் எதிர்க்கட்சி தலைவராகவும் தான் செயல்பட்டார். 1964-ல் நேருவின் மறைவுக்கு பிறகு, லால் பகதூர் சாஸ்திரியை பிரதமராகும் வகையில் ஆதரித்தார். 1966-ல் சாஸ்திரி மறைவுக்குப் பிறகு இந்திரா காந்தியை பிரதமராக தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்கு வகித்தார். இதனால் "பிரதமரை உருவாக்கும் தலைவர்" (Kingmaker) என உலக அரசியலிலும் புகழ் பெற்றார்.
காங்கிரஸ் கட்சிக்கு ஏன் புது ரத்தம் பாய்ச்ச நினைத்தார் காமராஜர்?
இந்திய அரசியலின் மிகப்பெரிய சாபக்கேடு மக்கள் இயக்கமாக தோன்றும் ஒரு இயக்கம் அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் அதற்கு நேர் எதிர் திசையில் பயணிப்பது. அப்படித்தான் சுதந்திர போராட்ட காலத்தில் உருவான இயக்கம் காங்கிரஸ். ஒரு வகையில் தான் சுதந்திர போராட்ட உணர்வை ஒருங்கிணைத்ததில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பங்கு உண்டு. அதனால்தான் அது மக்கள் இயக்கமாக பார்க்கப்பட்டது. ஆனால், சுதந்திர போராட்டம் முடிவடைந்து இந்தியா புதிய பாதையில் ஜனநாயக பாதையில் நடக்க தொடங்கி பின்னர் தான் காங்கிரஸ் கட்சி மீதான விமர்சனங்கள் அதிக அளவில் வரத் தொடங்கியது. நேரு இந்தியாவை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல அடித்தள மிட்ட போதும், கட்சியினர் தலைவர்கள் அதனை சரியாக கொண்டு சென்றார்களா என்றால் அது கேள்விக்குறி தான்.
காங்கிரஸ் கட்சியில் இருவகையானவர்கள் இருந்தனர். ஒரு தரப்பினர் மக்கள் மீதான அன்பால் ஒரு அரசியல் கட்சியில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற உணர்வோடு சுதந்திர போராட்ட காலத்தின் தாக்கத்தால் வந்தவர்கள். அதேபோல், அறிவு ரீதியாக புதிய இந்தியாவை படைக்க வேண்டும் என்ற உணர்வு பெற்று கட்சியில் இணைந்து உண்மையாக செயல்பட்டவர்கள்.
அதேபோல்தான், காங்கிரஸ் கட்சி நிறுவப்பட்ட காலம் முதல், அது நிலக்காரர்கள், உயர் சாதி வர்க்கங்கள், செல்வந்தர்கள், அதிகாரம் உடையவர்கள் ஆகியோரால் நடத்தப்படும் ஒரு அமைப்பாகவே இருந்தது எனும் குற்றச்சாட்டு இருந்து வந்தது. பல பிராமணர்கள், நிலக்கிழார்கள், நவீன கல்வி பெற்ற உயர்சாதி மக்கள் காங்கிரஸில் முக்கிய இடங்களை வகித்தனர். சுதந்திரப் போராட்டத்தில் காங்கிரஸ் ஒரு மக்கள் இயக்கமாக இருந்தாலும், அதன் தலைமை பெரும்பாலும் பணக்கார, நிலக்கார சமூகத்தினரிடமே இருந்தது என்ற விமர்சனமும் இருந்தது.
அதனால், பொதுநலனை தாண்டி தனி நலனை பேணும் நபர்களால் காங்கிரஸ் கட்சியில் பெரிய சிக்கல் உருவானது. அதிகார போதையால் கட்சிக்கு அவர்கள் மிகப்பெரிய அவப்பெயரை கொண்டு வந்தார்கள், ஊழல் குற்றச்சாட்டுகளும் வந்து கொண்டே இருந்தது. 1960களில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய நெருக்கடி மிகுந்த காலம் என்றே சொல்லலாம். அதனால்தான் கட்சிக்கும் அதிகார உணர்வை தாண்டி மக்கள் தொண்டு என்பதை முன்னிறுத்த நினைத்தார் காமராஜர்.
காமராஜர் திட்டம் எனும் புதுப் பாய்ச்சல்!
காமராஜர் திட்டம் என்பது 1963-ம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் காமராஜர் முன்வைத்த ஒரு அரசியல் சீர்திருத்தத் திட்டம் ஆகும். இது தேசிய அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கியது, புதிய சிந்தனையையும் உருவாக்கியது. காமராஜர் திட்டத்தின் முக்கிய நோக்கம், அமைச்சர்கள் பதவியை விட்டு விட்டு, மக்கள் சேவைக்காக நேரடியாக கட்சிப் பணியில் ஈடுபட வேண்டும் என்பது. இது ஒருவிதமான சீர்திருத்த முயற்சி. காமராஜரின் ஆலோசனைப்படி, ஆறு மாநில முதலமைச்சர்கள் மற்றும் ஆறு மத்திய அமைச்சர்கள், தங்கள் பதவிகளை விட்டு விட்டு கட்சி பணிக்குச் சென்றனர். அதில் லால் பகதூர் சாஸ்திரி, மோரார்ஜி தேசாய், ஜகஜீவன் ராம், ஸ்குப்தா (முதலமைச்சர் – பஞ்சாப்) ஆகியோர் முக்கியமானவர்கள்.
அரசியலில் தற்காலிக பதவிகளை விட, நீடித்த மக்கள் சேவையையே முக்கியமானது என்ற உயரிய அரசியல் போக்கை உருவாக்க நினைத்தார் காமராஜர். இது ஒரு நேர்மையான தலைவரின் பொறுப்புணர்வும், தியாகமும், சீர்திருத்த எண்ணமும் கொண்ட வரலாற்று நிகழ்வாக இது பார்க்கப்பட்டது. காமராஜரின் இந்த அரசியல் போக்கு நேருவுக்கு மிகவும் பிடித்துப் போகவே தான் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக பொறுப்பு கொடுத்தார்.
சாதாரண மக்களுடன் தொடர்பு கொண்டு மக்களோடு மக்களாக தொடர்ந்து பணியாற்றுவது, காங்கிரஸ் கட்சி எனும் மக்கள் இயக்க அமைப்பை வளர்ச்சி அடைய செய்வது, தேர்தல் பணிகளுக்கு தொடர்ந்து பணியாற்றுவது போன்றவற்றை நோக்கமாக வைத்து இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. மக்களுக்கு நெருக்கமாக செயல்படுவதன் மூலம் ஒரு கட்சி உயிர்ப்புடன் இருக்க வழிவகை செய்யும். அத்துடன், மூத்தவர்கள் விட்டுக் கொடுப்பதால் புதிய தலைவர்கள் உருவாக வாய்ப்பு உருவாகும்.