பெரியார், அம்பேத்கர் பெயர்கள் நீக்கம்... கடந்த ஆட்சி vs புதிய ஆட்சி : காட்டமாக விமர்சித்த விசிக!
சட்டப்பேரவையில் இந்த ஆண்டு பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் மானியக் கோரிக்கைக்கான கொள்கை விளக்கக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளில் இந்தக் கொள்கை விளக்கக் குறிப்பில் இடம்பெறும் “இடஒதுக்கீட்டின் வரலாறு” என்ற பகுதியில், தமிழ்நாட்டின் சமூகநீதி மற்றும் இடஒதுக்கீட்டு வரலாற்றை விளக்கும்போது, தந்தை பெரியார், புரட்சியாளர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோரின் பங்களிப்புகள் சுருக்கமாகப் பதிவு செய்யப்பட்டிருப்பது வழக்கம்.
ஆனால், இந்த ஆண்டு வெளியிடப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பில் அந்த வரலாற்றுப் பகுதியில் தந்தை பெரியார், புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் மற்றும் பண்டித ஜவஹர்லால் நேரு ஆகிய மூவரின் பெயர்களும் இடம்பெறவில்லை என புகார் எழுந்திருக்கிறது.
தமிழக சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில், இடஒதுக்கீட்டு வரலாறு பகுதியில் வழக்கமாக இடம்பெறும் தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், ஜவஹர்லால் நேரு ஆகியோரின் பெயர்கள் இந்த ஆண்டு நீக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வரலாற்றை இருட்டடிப்பு செய்வது மிகப்பெரிய வன்கொடுமை என விசிக பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் கடும் கண்டனம் தெரிவித்து, அரசு தலைமை செயலாளர் மற்றும் தொடர்புடைய செயலாளர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசிக பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் அரசுக்கு கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.
இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில், கடந்த ஆண்டுகளில் இடம்பெற்றிருந்த வரலாற்றுச் செய்திகளை இந்த ஆண்டு அடியோடு மறைக்க அல்லது நீக்க காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், இதை அமைச்சர்களின் குற்றமாக என்னால் கருத முடியவில்லை. அவர்கள் புதிதாக பொறுப்பேற்றவர்கள். துறையின் அரசு செயலாளரும் அவரை வழிநடத்தும் அரசு தலைமை செயலாளருமே இதற்கு பொறுப்பாவார்கள் என்றும் கூறியுள்ளார்.
அதோடு, கொள்கை குறிப்பேட்டை அரசு தலைமைச்செயலாளரின் வழிகாட்டல் இன்றி மாற்றி இருக்க முடியாது என்பதால் அரசு தலைமைச்செயலாளரும் தொடர்புடைய துறையின் அரசு செயலாளரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், வரலாற்றை இருட்டடிப்பு செய்வதை விட பெரிய வன்கொடுமை வேறெதும் இருக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் இடதுசாரி அமைப்புகள் மற்றும் CJP கட்சியினரின் போராட்டங்களில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசு கல்லூரி முதல்வர்களுக்கு கல்லூரிக் கல்வி இயக்ககம் சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தலைமை செயலர் அனுமதியோடு அனுப்பப்பட்டது என்றும், இதற்கு பொறுப்பேற்று தலைமை செயலரை பதவி நீக்க வேண்டும் என்றும் சிபிஎம் கட்சியும் கூறியிருந்தது. அந்த வகையில் தலைமை செயலாளரை கூட்டணி கட்சியான விசிகவும் விமர்சித்துள்ளது தவெக அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் 2026-ல் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த முருகானந்தம் நீக்கப்பட்டு, அவருக்கு பதில் சாய்குமார் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். தேர்தல் முடிந்து தவெக அரசு பொறுப்பேற்ற நிலையில், சாய்குமாரே தலைமை செயலாளராக தொடர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

