அதிகரிக்கும் வைரஸ் காய்ச்சல்.. முகக்கவசம் அணிய அறிவுரை!
வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணியுமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணியுமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு வாரங்களாக வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகமாக உள்ளது. காலநிலை மாற்றம், மழை பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. வைரஸ் காய்ச்சலின் தன்மையை கண்டறிய, தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் சளி, காய்ச்சல், இருமல், தலைவலி உள்ளிட்ட அறிகுறிகளோடு சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு அனுப்ப சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
பெறப்பட்ட மாதிரிகளை பரிசோதித்ததில் புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டால், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளது. முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள், திருமணம், பிறநிகழ்ச்சிகள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், காய்ச்சல் அறிகுறி தெரிந்தால் உடனடியாக மருத்துவமனையை நாடவும் தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.