பாராட்டு விழா | “கண்ணகி நகரா.. வேணாம் பா-ன்னு சொல்வாங்க.. ஆனா இப்போ..” - ’கபடி’ கார்த்திகா பேச்சு!
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற கபடி வீரர் கார்த்திகாவுக்கு நேற்று கண்ணகி நகர் கூடைப்பந்து மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. அதில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, “குறுகிய கால இடைவெளியில் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கார்த்திகாவுக்கு இந்த நிகழ்ச்சி நேரு ஸ்டேடியத்தில் வைத்து நடத்தி இருக்கலாம். ஆனால், தங்கை கார்த்திகா பேட்டியை பார்த்தேன். கண்ணகி நகருக்கு உலக அளவில் பெருமை செய்துள்ள அவருக்கு பாராட்டு விழாவை இங்கு நடத்தினால் தான் சிறப்பு. இங்குள்ள அனைத்து பொதுமக்கள் முகம் அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் குழந்தை சாதித்ததாக நினைத்து வந்த உங்கள் அனைவருக்கும் நன்றி.
இந்த நிகழ்வுக்கு தலைமை பொறுப்பு ஏற்று நடத்தியல் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. எனக்கு 9 வயதில் பேத்தி உள்ளார். கார்த்திகாவும் எனக்கு ஒரு பேத்தி மாதிரி தான். கார்த்திகா முதல்வர், துணை முதல்வர் அவர்களை சந்தித்தபோது, கபடி மைதானம் வேண்டும் என கேட்டுள்ளார். அதன்படி சிந்தடிக் கபடி மைதானத்தின் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. அதன்படி, இந்த பணிகள் 20 நாட்களுக்குள் முடிந்து, மைதானத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து கார்த்திகா பேசுகையில், “எனக்கு உதவிய பயிற்சியாளர் மற்றும் கண்ணகி நகரைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றி. வெளியில் நாம் வேலைக்கு செல்லும் பொழுது கண்ணகி நகர் என்றால் வேலைக்கு எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் இனி தைரியமாக சொல்வோம் நாம் கண்ணனி நகரை சேர்ந்தவர் என்று” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, இன்று கார்த்திகா அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி-யை அவரது சென்னை இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
முன்னதாக, தமிழக அரசு சார்பில் இளையோர் ஆசியக் கோப்பை கபடி ( மகளிர்) போட்டியில் தங்கம் வென்ற கார்த்திகா , மற்றும் அபினேஷ்-க்கு (ஆடவர் கபடி போட்டி) ஊக்கத் தொகையாக ரூபாய் 25 லட்சத்தை தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், அதனை 1 கோடியாக மாற்றி அறிவிக்க அதிமுக சார்பில் வலியுறித்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

