கண்ணகி நகர் கார்த்திகா
கண்ணகி நகர் கார்த்திகாpt web

கண்ணகி நகர் ’பைசன்’ | ஏழ்மையை உடைத்து புயலாக கிளம்பிய ’தங்க மகள்’., யார் இந்த கார்த்திகா ?

பஹ்ரைனில் நடந்த ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி, இறுதிப் போட்டியில் ஈரானை 75-21 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தித் தங்கம் வென்றது. இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றியவர் கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகா.
Published on
Summary

ஏழ்மையின் நிழலில் ஒளிரும் விளக்காய் கண்ணகி நகரில் இருந்து கார்த்திகா கபடி போட்டியில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். இந்நிலையில், கார்த்திகாவும் கண்ணகி நகரும் விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

சென்னை புறநகர்ப் பகுதியில், கிழக்கு கடற்கரைச் சாலை என்றாலே ஐடி எக்ஸ்பிரஸ் ஹைவேக்கும் இடையில் இருக்கும் செல்வச் செழிப்பைப் பறைசாற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் தான் நினைவுகளுக்கு வரும். ஆனால், அந்த வானுயர கட்டடங்களுக்கு நடுவே ஒளிந்து நிற்கிறது கண்ணகி நகர். இந்தியாவின் மிகப்பெரிய மீள்குடியேற்றப் பகுதி இது. அங்கிருக்கும் 24,000-க்கும் மேற்பட்ட வீடுகளில் லட்சக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். நகரத்தின் நவீனத்துவமும் மிக அருகாமையில் வறுமையின் குறியீடான ஒரு பகுதியாக உழைக்கும் மக்கள் வாழும் கண்ணகி நகர் இருந்து வருகிறது. அடிப்படை வசதிகளுக்காக இப்பகுதிகள் போராட்டங்களை சந்தித்த வண்ணமே இருக்கின்றனர். அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டாலும் இன்னும் அது இயல்பான வாழ்க்கைக்காக ஏங்கிய வண்ணமே கண்ணகி நகர் இருக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில் ஏழ்மையின் நிழலில் ஒளிரும் விளக்காய் சாதித்துள்ளார் கண்ணகி நகர் கார்த்திகா. பஹ்ரைனில் நடந்த ஆசிய இளைஞர் விளையாட்டு போட்டிகளில் இந்திய மகளிர் கபடி அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது, இந்த சாதனையில், கண்ணகி நகர் கார்த்திகா துணை கேப்டனாக செயல்பட்டு இந்தியா அணி வெற்றி பெறுவதில் பெரும் பங்கு வகித்துள்ளார்.

தங்கம் வென்ற இந்திய ஜூனியர் கபடி அணி
தங்கம் வென்ற இந்திய ஜூனியர் கபடி அணிpt web

சென்னை கண்ணகி நகரில் உள்ள அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் கார்த்திகா கடந்த ஆறு வருடங்களாக கபடி போட்டிகளில் விளையாடி வருகிறார். இவருக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் காவியா என்ற சகோதரியும் உள்ளார் அவரும் கபடி வீராங்கனை தான், இவர் தாய் சரண்யா ஆரம்ப காலங்களில் தூய்மை பணியாளராக இருந்து பின் ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார், இவரது தந்தை ரமேஷ் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். கபடி போட்டிக்காக பத்தாம் வகுப்பு பொது தேர்வை தள்ளி வைத்து பிஹாரில் நடந்த கபடி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று அதற்குப் பிறகு பத்தாம் வகுப்பு மறுதேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார் கார்த்திகா.

ஆரம்பத்தில் கேலி கிண்டல் !

சிறுவயது முதல் கார்த்திகா கபடி போட்டியில் ஆர்வத்துடன் விளையாடியதாகவும், இரு பெண் பிள்ளைகளையும் கபடி போட்டிக்கு அனுப்பியதற்காக ஆரம்பத்தில் கேலி கிண்டல் செய்தவர்கள் இப்போது வியப்பில் பெருமைப்படுவதாகவும், தன்னை ஏசியவர்களையும் நேசிக்க வைத்து கண்ணகி நகருக்கென தனி அடையாளமாக உருவெடுத்துள்ளதாக பெருமையோடு கார்த்திகா பற்றி பேசுகின்றனர் கார்த்திகாவின் தாய் மற்றும் தந்தை.

கார்த்திகாவின் தாய் மற்றும் தந்தை
கார்த்திகாவின் தாய் மற்றும் தந்தைNGMPC22 - 168

கண்ணகி நகரின் மீது உள்ள இழுக்கை நீக்கி கண்ணகி நகரை மாற்ற வேண்டும் என நினைத்து தூவிய விதை கார்த்திகா என்ற வடிவில் மரமாக வளர்ந்துள்ளதாகவும், போதிய விளையாட்டு மைதானம், போதிய உடற்பயிற்சி கருவிகள் ஏதும் இல்லாமல் கார்த்திகா சாதித்தது கண்ணகி நகரின் விளையாட்டு வளர்ச்சிக்கு பெரும் அடித்தளமாக அமையும் எனவும் தெரிவிக்கிறார் கார்த்திகாவின் பயிற்சியாளர் ராஜி...

கண்ணகி நகர் கார்த்திகா
தமிழ்நாடு திரும்பிய கார்த்திகா, அபினேஷ்-க்கு உற்சாக வரவேற்பு - முதல்வருடனும் நேரில் சந்திப்பு

ஸ்லம்போர்டுல இருந்து வந்திருக்கீங்களா, கண்ணகி நகரா, நீங்க எல்லாம் போட்டிக்கு வேணாம் என ஒதுக்கிய இடத்திலிருந்து கார்த்திகா சாதித்துள்ளது எங்களுக்கு பெருமையாக உள்ளதாகவும் கண்ணகி நகர்னா இனி கார்த்திகா தான் என்கின்றனர் கண்ணகி நகர் குழுவில் உள்ள சககபடி வீராங்கனைகள்.

இவ்வாறு, கார்த்திகாவின் வெற்றி, ஏழை மாணவ மாணவியரின் வெற்றிக்கு உத்வேகமாக அமைந்துள்ளது. ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கம் வென்று கொடுக்க வேண்டும் என்பதே என் கனவு என்கிறார் கார்த்திகா,. தமிழ்நாட்டு பைசன் கார்த்திகாவின் பயணம், இன்னும் பல வெற்றிகளை ஏற்படுத்தி பல சாதனைகளை நிச்சயமாக படைக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com