விவசாயிகள் உயிரிழப்பு... தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
விவசாயிகள் உயிரிழப்பு தொடர்பாக 6 வார காலத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தேசியமனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தண்ணீரின்றி பயிர் கருகிய வேதனையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தற்கொலை மற்றும் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளனர். இதையடுத்து வறட்சி பாதிப்புகளின் நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழக அரசு நியமித்துள்ள அதிகாரிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டது. களநிலவரத்தை ஆய்வு செய்து அதன் அறிக்கை வரும் 9 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சில இடங்களில் அமைச்சர்கள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த நிலையில், விவசாயிகள் உயிரிழப்பு தொடர்பாக 6 வாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தேசியமனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் ஒரு மாதத்தில் 106 விவசாயிகள் உயிரிழந்ததாக வெளியான செய்தி குறித்து அரசு பதிலளிக்க வேண்டும் என கூறியுள்ளது. முன்னதாக சென்னை உயர்நீதிமன்றம் விவசாயிகள் உயிரிழப்பு தொடர்பாக தமிழக அரசு 4 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.