தேனி | 300 தென்னங்கன்றுகளை வெட்டிய திமுக ஊராட்சிமன்ற உறுப்பினர்; குடும்பத்துடன் விவசாயி போராட்டம்!

தேனி அருகே பட்டா நிலத்தில் இருந்த 300 மரக்கன்றுகளைத் தனது ஆதரவாளர்களுடன் சென்று திமுக ஊராட்சி மன்ற உறுப்பினர் வெட்டி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெட்டப்பட்ட தென்னை மரக்கன்றுகள்
வெட்டப்பட்ட தென்னை மரக்கன்றுகள்PT WEB

செய்தியாளர் - அருளானந்தம்

தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள குமணன்தொழு பகுதியைச் சேர்ந்தவர் முத்து. இவருக்கு செல்வம், சின்னசெல்வம் என இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமாக 1 ஏக்கர் 75 சென்ட் பட்டா நிலமும், அதை ஒட்டி 80 சென்ட் புறம்போக்கு நிலமும் இருந்துள்ளது. கடந்த 3 தலைமுறையாக இங்கே அவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்த குமணன்தொழு ஊராட்சியில் திமுகவைச் சேர்ந்த அமுதா என்பவர், 2 வார்டுகளுக்கு உறுப்பினராக உள்ளார். அமுதா மற்றும் அவரது கணவர் செல்வம், அவருடைய உறவினர்கள் என 20க்கும் மேற்பட்டோர் முத்துவின் நிலத்தில் நடவு செய்யப்பட்டிருந்த 300 தென்னங்கன்றுகள், இலவ மரங்கள் மற்றும் மாட்டுத் தீவனத்திற்காக வளர்க்கப்பட்டு வந்த சீமை புல் ஆகியவற்றை கடந்த டிசம்பர் மாதம் வெட்டி வீசியுள்ளனர்.

குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட  விவசாயி
குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி

இச்சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட முத்துவின் மகன் செல்வம் மயிலாடும்பாறை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் புகாரை எடுக்கவில்லை எனத் தெரிகிறது. மாறாக தென்னங்கன்றுகளை வெட்டி வீசிய ஊராட்சி மன்ற உறுப்பினர் அமுதாவின் கணவர், செல்வம் கொடுத்த புகாரை மட்டும் போலீசார் பெற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து முத்து அவருடைய மகன்கள் செல்வம் மற்றும் சின்னசெல்வம் ஆகிய 3 பேரின் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஒரு தரப்பினருக்கு ஆதரவாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், எதிர்தரப்பினர் கொடுத்த புகாரைப் பெற்று வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

வெட்டப்பட்ட தென்னை மரக்கன்றுகள்
"உறுதியாக இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான் கிடைக்கும்" - ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை

மேலும் கைது செய்யப்பட்ட 3 நபர்களையும் நீதிபதி தன்னுடைய, சொந்த ஜாமினில் விடுவித்து காவல்துறையினரே அவர்களது இல்லத்தில் அழைத்துச் சென்று விட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.

ஆனால் நீதிபதி உத்தரவிட்டும், மயிலாடும்பாறை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளாமல் இருந்து வந்துள்ளனர். மீண்டும் பாதிக்கப்பட்ட நபர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இந்த வழக்கை மீண்டும் விசாரணை செய்த நீதிபதி, தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு உரிய விசாரணை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்தார்.

இதைத்தொடர்ந்து, நீதிமன்றம் இரண்டு முறை உத்தரவு பிறப்பித்தும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்யவில்லை எனத் தெரிகிறது. மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை என்பதால் பாதிக்கப்பட்ட செல்வம் மற்றும் அவரது தம்பி ஆகியோர் தங்களின் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார், அவர்களிடம் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்த அழைத்துள்ளார் எனக் கூறியதால் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றார். ஆனால் மாலை 4 மணியை கடந்தும், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் யாரும் இவர்களை விசாரணைக்கு அழைக்கவில்லை என தெரிகிறது. இதனால் மீண்டும் அவர்கள் யாரிடம் முறையிடுவதென தெரியாமல் தவித்துவருகின்றனர்.

வெட்டப்பட்ட தென்னை மரக்கன்றுகள்
சென்னையில் காதலால் ஏற்பட்ட கைகலப்பு: பெண் வீட்டாரின் ஆத்திரத்தால் காதலனுக்கு நேர்ந்த கொடூரம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com