\
Famous Instagram doctor has been arrested
Doctor RajasekarDoctor Rajasekar Instagram

பிரபல இன்ஸ்டா மருத்துவர் கைது! பின்னணியில் திடுக் தகவல்! நடந்தது என்ன?

குழந்தை விற்பனை வழக்கில் பிரபல இன்ஸ்டா மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Published on

செய்தியாளர் - கார்த்திகேயன்

சென்னை தியாகராய நகரை சேர்ந்தவர் மருத்துவர் ராஜசேகர். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலம் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு பிரபலம் அடைந்த இவர், வில்லிவாக்கம் பகுதியில் பிரபல மருத்துவமனை ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்த மருத்துவமனையில் ரிசப்சனிஷ்டாக பணியாற்றி வருபவர் தான் துர்கா. இவர்கள் இருவர் உட்பட மொத்தம் 7 பேரை போலீசார் கைது செய்து, தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதாவது, சென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த பவித்ரா என்ற இளம்பெண், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு 2-வது முறையாக கர்ப்பம் தரித்துள்ளார். தனது கணவர் சிறைக்கு சென்றுவிட்டதால், பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்ட அவர், அந்த குழந்தையை எப்படி பெற்றெடுக்க போகிறோம் என்று வருத்தம் அடைந்ததாக கூறப்படுகிறது.

Doctor Rajasekar
Doctor Rajasekar Doctor Rajasekar Instagram

இதனை தெரிந்துக் கொண்ட ஆண்டாள் என்ற பெண்ணும், தனலட்சுமி என்ற இளம்பெண்ணும் சேர்ந்து புது ஐடியா ஒன்றை வழங்கியுள்ளனர். “எனக்கு தெரிந்த ஆந்திர தம்பதிக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. உனக்கு பிறக்கப்போகும் குழந்தையை, அந்த தம்பதிக்கு விற்பனை செய்துவிடு” என்று ஐடியா கொடுத்துள்ளனர். மேலும், இதற்காக 4 லட்சம் ரூபாய் பணம் தர அந்த தம்பதி தயாராக இருப்பதாகவும், பிரசவ செலவை ஏற்றுக் கொள்வதாகவும் கூறியுள்ளனர்.

இதற்கு, பவித்ராவும் ஒத்துக் கொண்டுள்ளார். இந்த நிலையில், கடந்த 18-ஆம் தேதி அன்று, பவித்ராவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. மறுநாளே 4 லட்சம் பணத்தை வாங்கி பவித்ராவிற்கு கொடுத்துள்ளனர். இதையடுத்து, இதற்கான கமிஷன் பணமாக, மருத்துவமனை வரவேற்பாளர் துர்கா, இடைத்தரகர் ஆண்டாள் ஆகியோருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் பணம் கமிஷனாக கொடுத்துள்ளார் பவித்ரா.

Doctor Rajasekar
Doctor Rajasekar Doctor Rajasekar Instagram

ஆனால், தனலட்சுமிக்கு மட்டும் கமிஷன் பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த தனலட்சுமி, குழந்தை விற்பனை விவகாரத்தை பவித்ராவின் பாட்டியிடம் கூறியுள்ளார். அதன்பின்னர் தான், இந்த குழந்தை விற்பனை விவகாரம் வெளியே வந்துள்ளது. தகவல் அறிந்த வில்லிவாக்கம் போலீசார் ஓட்டேரியை சேர்ந்த ஆண்டாள், கொடுங்கையூரை சேர்ந்த தனலட்சுமி, ராயப்பேட்டையை சேர்ந்த துர்கா, குழந்தையை வாங்கிய ஆந்திர தம்பதியான செல்வரசி - கணேசமூர்த்தி, தனியார் மருத்துவமனை உரிமையாளர் ராஜசேகரனையும் சேர்த்து மொத்தம் 7 பேரை கைது செய்தனர்.

இதற்கிடையே, அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து செல்லப்பட்டபோது, மருத்துவர் ராஜசேகருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறி, அவரை வில்லிவாக்கம் போலீசார் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ராஜசேகரின் மருத்துவமனையில் தான் பவித்ராவிற்கு பிரசவம் மேற்கொண்டதால், அந்த மருத்துவரையும் கைது செய்துள்ள போலீசார், இதற்கு முன்பு இதேபோல் ஏதாவது சட்ட விரோதமான பிரசவம் பார்க்கப்பட்டது என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Famous Instagram doctor has been arrested
மர்மத்தை மூடி மறைக்கும் சீனா? திபெத்தில் இயற்கையின் கோரம்! காட்டிக் கொடுத்த பரபரப்பு சிசிடிவி!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com