மர்மத்தை மூடி மறைக்கும் சீனா? திபெத்தில் இயற்கையின் கோரம்! காட்டிக் கொடுத்த பரபரப்பு சிசிடிவி!
செய்தியாளர் - கார்த்திகேயன்
இமயமலை பகுதியில் உள்ள பனிப்பாறை உருகி நோபளத்தின் கோஷி ஆற்றில் பாய்ந்ததால், கடந்த ஆகஸ்டு 26-ஆம் தேதி அன்று மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டது. 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட பனிப்பாறை உருகியதால் ஏற்பட்ட இந்த வெள்ளத்தில் சிக்கி, இதுவரை 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை டிரோன் கேமராக்களை கொண்டும், மீட்பு படையினர் மூலமாகவும் மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
இப்படியான சூழலில், இந்த விபத்து குறித்து மிகப்பெரிய மர்மம் ஒன்றை சீனா மூடி மறைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தின் முக்கிய வர்த்தக மையமான கியிரோங் துறைமுகமும் இந்த வெள்ளத்தில் சிக்கி முற்றிலுமாக சிதைந்துள்ளது. 30 அடி உயரத்திற்கு எழுந்த மிகப்பெரிய வெள்ளம், சுனாமி போல சீறிப் பாய்ந்து, கியிரோங் துறைமுகத்தையும், அங்கிருந்த பொதுமக்களையும் தூக்கி வீசுவது, உயிர் பிழைக்க அலறி அடித்து மக்கள் ஓடுவது சிசிடிவி காட்சி ஒன்றில் பதிவாகியுள்ளது.
இவ்வளவு பெரிய பேரழிவு மற்றும் அதற்கான அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள் சர்வதேச ஊடகங்களிலும் பிற சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவி வருகிறது. ஆனால், சீனாவின் உள்நாட்டு சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் இதுதொடர்பான காட்சிகள் இடம்பெறவில்லை.
மேலும், தனிநபர்கள் யாராவது இந்த வீடியோவை சீனாவின் சமூக வலைதளங்களில் பதிவிட்டாலும், அது உடனடியாக நீக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. திபெத்தில் நடக்கும் உயிரிழப்புகளையும், பாதிப்புகளையும் ஏன் சீனா மூடி மறைக்கிறது என்று, உலக மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. தகவல்கள் மற்றும் துயரச் செய்திகளை வெளிப்படையாகக் காட்டுவதில் சீன அரசாங்கம் தணிக்கைக் கொள்கையைக் பின்பற்றுவதாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது.

