ஈரோடு | அரசு பேருந்திற்குள் அருவிபோல் கொட்டிய மழை – பயணிகள் அவதி
செய்தியாளர்: டி.சாம்ராஜ்
தாளவாடி மலைப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. கடந்த சில தினங்களாக தாளவாடி மலைப்பகுதிகளான ஆசனூர், தலமலை, இக்களூர், கெட்டவாடி, கோடிபுரம், ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இப்பகுதி மலை கிராமங்களில் வசிக்கும் மக்கள் அன்றாட தேவைகளுக்கு அரசு பேருந்தையே நம்பியுள்ளனர். இந்நிலையில், தாளவாடியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிளுடன் அரசு பேருந்து சத்தியமங்கலம் நோக்கி புறப்பட்டது.
அப்போது, ஆசனூர் அருகே பேருந்து சென்ற போது பலத்த மழை பெய்தது. இதனால் பேருந்தின் மேற்கூரையில் உள்ள ஓட்டைகள் வழியாக மழைநீர் அருவியாக கொட்டியது. பேருந்தில் பயணித்த பயணிகள் இருக்கையில் அமரமுடியாத நிலையில் மழையில் நனைந்தபடியே பயணித்தனர். இதை பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
மலைப்பகுதியில் ஓட்டை ஓடசலான பேருந்துகள் இயக்கப்படுவதால் அடிக்கடி பழுதாகுவதும், மழைநீர் கொட்டுவதும் தொடர் கதையாகி வருகிறது. எனவே மலைப்பகுதியில் நல்ல நிலையில் உள்ள பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்