கேரளா | கடலுக்குள் விழுந்த கொள்கலன்கள்! சுற்றுச் சூழலுக்கு ஆபத்து.. மீனவர்களுக்கு எச்சரிக்கை!
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே லைபீரியாவைச் சேர்ந்த MSC ELSA 3 என்ற கப்பல் சாய்ந்து விபத்தில் சிக்கியது. 184 மீட்டர் நீளமுள்ள இந்த கப்பல், விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து கொச்சிக்கு சென்று கொண்டிருந்தபோது கடலில் சாய்ந்தது.
இதில் மிகப்பெரிய அளவில் கப்பல்களுக்கான எரிபொருள் கொண்ட கொள்கலன்கள் (கன்டெய்னர்) இருந்ததாக தெரிகிறது. கப்பலில் பணியாற்றிய 20க்கும் மேற்பட்டோர் இந்திய கடலோரக் காவல்படையினரால் மீட்கப்பட்டனர். கப்பலில் இருந்து எட்டுக் கொள்கலன்கள் கடலில் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
காத்திருக்கும் ஆபத்து.. நிபுணர்கள் எச்சரிக்கை!
விபத்தால் கடல் சூழலுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என சுற்றுச்சூழல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கடலில் விழுந்த கொள்கலன்கள் மற்ற கப்பல்கள் மற்றும் மீனவர்கள் மீதான அபாயத்தை ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடுமையான மழை பெய்வதால் கொள்கலன்கள் கரையை நோக்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்தப் பகுதியில் பயணம் செய்யும் அனைத்து கப்பல்கள் மற்றும் மீனவர்கள் முன் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடற்கரையில் கொள்கலன்கள் வந்தால் அவற்றை தொடக்கூடாது என்றும் பொதுமக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.