ஈரோடு கிழக்குத் தொகுதி| இடைத்தேர்தல் அறிவிப்பு.. மீண்டும் போட்டியிடும் காங்கிரஸ்!
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியின் எம்.எல்.ஏவான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்தாண்டு இறுதியில் காலமானார். அவர் காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, டெல்லியில் ஆம் ஆத்மியின் பதவிக்காலம் அடுத்த மாதம் 23ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, அங்கு பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது.
இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. மேலும், இந்தத் தேர்தலுடனேயே ஈரோடு கிழக்குத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியிலும் பிப்ரவரி 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் வாக்கு எண்ணிக்கையும் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 6-ஆம் தேதி (நேற்று) வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல்படி, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் 1,09,636 ஆண் வாக்காளர்களும், 1,16, 760 பெண் வாக்காளர்களும், 37 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2,26, 433 வாக்காளர்கள் உள்ளனர். தற்போதும் இதே தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் யார் என்பது குறித்து காங்கிரஸ் தலைமையுடன் ஆலோசித்து முடிவு செய்து அறிவிக்கப்படும் என மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனான திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார். அவரது மறைவிற்குப் பிறகு 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில், திமுக கூட்டணியின் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன், டிசம்பர் 14-ஆம் தேதி காலமானர் என்பது குறிப்பிடத்தக்கது.