ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: எந்தக் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு அதிகம்? கருத்துக்கணிப்பு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: எந்தக் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு அதிகம்? கருத்துக்கணிப்பு!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: எந்தக் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு அதிகம்? கருத்துக்கணிப்பு!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான மக்கள் ஆய்வு அமைப்பின் கருத்து கணிப்பில், காங்கிரஸ் கட்சி 39.5 சதவீத வாக்குகளை பெற்று முதல் இடத்தில் உள்ளது. அதிமுக 24.5 சதவீத வாக்குகளுடன் 2-ம் இடத்திலும், நாம் தமிழர் கட்சி 9.5 சதவீத வாக்குகளுடன் 3-ம் இடத்திலும் இருப்பதாக தெரியவந்துள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் குறித்து மக்கள் ஆய்வு என்ற அமைப்பு கள ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அதன் கருத்து கணிப்பு முடிவுகளை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் மக்கள் ஆய்வு அமைப்பின் இயக்குனர் பேராசிரியர் ச.ராஜநாயகம் இன்று வெளியி்ட்டார். அவர் பேசுகையில், “ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில், எங்கள் அமைப்பின் சார்பில் 2 ஆய்வு நெறியாளர்களும், 45 களத் தகவல் சேகரிப்பாளர்களும் மேற்கொண்டு வரும் கள ஆய்வில் கடந்த 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரையிலான முடிவுகளின் படி, காங்கிரஸ் கட்சி 39.5 சதவீத வாக்குகளை பெற்று முதல் இடத்தில் உள்ளது. அ.தி.மு.க. 24.5 சதவீத வாக்குகளுடன் 2-ம் இடத்திலும், நாம் தமிழர் கட்சி 9.5 சதவீத வாக்குகளுடன் 3-ம் இடத்திலும், தே.மு.தி.க. 2 சதவீத வாக்குகளுடன் 4-ம் இடத்திலும் உள்ளது. 

இதில், தற்போது மவுனம் காத்து வரும் 21 சதவீத வாக்காளர்களின் வாக்குகளையும் சேர்த்த கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் கட்சி 65 சதவீத வாக்குகளும், அ.தி.மு.க. 41 சதவீதமும், நாம் தமிழர் கட்சி 17 சதவீதமும், தே.மு.தி.க. 4 சதவீத வாக்குகளையும் பெறும்.

அதே நேரத்தில், 21 வயதுக்கு உட்பட்ட இளம் வாக்காளர்களின் வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு 29.5 சதவீமும், காங்கிரஸ் கட்சிக்கு 28.5 சதவீதமும் (இதில் பெரும்பான்மை தி.மு.க. ஆதரவாளர்கள்), அ.தி.மு.க.வுக்கு 17 சதவீதமும், தே.மு.தி.க.வுக்கு 3 சதவீதமும் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. 

மற்றபடி கல்வி, தொழில், சாதி, மதம், பாலினம் ஆகிய பிற அனைத்து காரணிகளை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி முதலிடம், அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சிகள் முறையே 2-ம், 3-ம் இடங்களிலும் உள்ளன.

தேர்தல் களத்தில், வாக்காளர்களுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை பணம் வழங்கப்படுகிறது. தி.மு.க., அ.தி.மு.க.வினர் பாதுகாப்பாக பணப்பட்டுவாடா செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். 90 சதவீத வாக்காளர்கள் பணம் வாங்குவதை தவறாக கருதாமல் இருக்கின்றனர். 

தி.மு.க.வினரிடம் தேர்தல் நின்றுவிடக்கூடாது என்ற அச்ச உணர்வும் மேலோங்கி இருக்கிறது. பணம் கொடுத்தால் மட்டும் வாக்கு கிடைக்கும் என்பதும் சந்தேகம் தான். வாக்காளர்கள் அனைவருக்கும் பணம் கொடுக்கப்படும் நிலையில், தேர்தல் ஆணையம் இயங்குகிறதா? அல்லது வேறு உலகத்தில் கடமையாற்றுகிறதா? என்ற சந்தேகம் எழுகிறது. தேர்தல் ஆணையம் தோல்வி அடைந்துள்ளதாகவே தெரிகிறது.

தி.மு.க. அரசின் அதிருப்தியை நாம் தான் பேசுகிறோம். ஆனால், பணம் உள்ளிட்ட காரணிகள் அங்கே வேலை செய்வதால் தி.மு.க. ஆதரவு அதிகமாகவே உள்ளது. சில நாட்களுக்கு முன்பு வரை கூவத்தூர் கூடாரங்களாக இருந்த இடங்கள், தற்போது வெறிச்சோடி காணப்படுகின்றன. ஒருசில இடங்களில் வாக்காளர்கள் தங்கள் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டைகளை கொண்டு காண்பித்து தங்களின் வாக்குகளை உறுதி செய்து பணத்தை பெற்றுச் சென்றதையும் பார்க்க முடிந்தது. தலைமைச் செயலகம் சென்னையில் இருக்கும் போது, தி.மு.க. அமைச்சர்கள் அனைவரும் அங்கே இருப்பது, தலைமைச் செயலகம் அங்கே எப்படி செயல்பட முடியும் என்ற எதிர்மறையான எண்ணத்தை தோற்றுவிக்கிறது

ஈரோடு தேர்தல் களத்தில் பா.ஜ.க.வோ, மோடியோ இல்லை. அ.தி.மு.க.வானது அ.தி.மு.க.வாகவே செயல்படுகிறது. கூட்டணி கட்சிகள் பெரிதாக சோபிக்கவில்லை'' என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com